வெஸ்ட் இண்டீஸில் அடுத்த மாதம் U19 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, U19 ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றது. 8 அணிகள்பங்கேற்ற இந்த தொடரரில், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, குவைத், வங்கதேசம், நேபால் அணிகள் இன்னொரு பிரிவிலும் போட்டியிட்டன.
லீக் சுற்றில் நடைபெற்ற போட்டிகளில், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று, பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது இந்திய அணி. எனினும், அரை இறுதியில் சுதாரித்து கொண்டு விளையாடிய இந்திய அணி, வங்கதேசத்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டிசம்பர் 31-ம் தேதி நடந்த இறுதிப்போட்டியில் இந்தியாவும் - இலங்கையும் மோதின. துபாயில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை, முதலில் பேட்டிங் செய்தது. போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால், 38 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால், 38 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.
எட்டாவது முறையாக சாம்பியன்ஸ்:
எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய இந்திய அணிக்கு, ஓப்பனர் அங்க்ரிஷ் அரை சதம் கடந்து அதிரடியான தொடக்கம் தந்தார். இதனால், 21.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது இந்திய அணி. மீண்டும் போட்டியின் நடுவே மழை குறுக்கிடதால், D/L முறைப்படி இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம், 8வது முறையாக U19 ஆசிய கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது இந்திய அணி. இதுவரை 9 முறை U19 ஆசிய கோப்பை தொடர் நடைபெற்றுள்ள நிலையில், 8 முறை கோப்பையை கைப்பற்றி இருக்கிறது இளம் இந்திய படை. மேலும், U19 ஆசிய கோப்பை வரலாற்றில், இறுதிப்போட்டியில் தோல்வியடையாத அணி என்ற சாதனையையும் தன்வசம் வைத்திருக்கிறது இந்திய அணி.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்