இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஜாம்பவான் கேப்டனுமான எம்.எஸ் தோனி, ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் 77வது சுந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். ஆகஸ்ட் 15 ஆம் தேதியான இன்று தோனியின் இல்லத்தில் இந்திய மூவர்ணக் கொடி பெருமையுடன் பறக்கும் வீடியோ கிளிப் பல்வேறு சமூக ஊடக தளங்களில் வைரலாக பரவியது.


ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எஸ். தோனி இந்திய கிரிக்கெட் அணிக்காக மூன்று வடிவிலான ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இந்திய அணிக்காகவும், அணிக்கு வெளியேயும் தேசத்திற்காக தோனி அர்ப்பணிப்பு குறித்து சொல்ல முடியாத அளவிற்கு அதிகம். மேலும், இந்திய பிராந்திய இராணுவத்தின் பாராசூட் படைப்பிரிவில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியை பெருமையுடன் வகித்து வருகிறார்.






42 வயதான எம்.எஸ்.தோனி இதுவரை பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் போன்ற விருதுகளை பெற்றுள்ளார். மேலும், மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது போன்ற மதிப்புமிக்க விளையாட்டு விருதுகளையும் பெற்றுள்ளார். 


இந்தநிலையில், இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயனர் ஒருவர் தோனியின் பண்ணை வீட்டில் இந்திய தேசியக் கொடி கம்பீரமாக பறப்பதை வீடியோவில் காணலாம். 






ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி, ஒயிட் - பால் கிரிக்கெட்டில் மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் ஆவார். கடந்த 2007ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைப் பட்டம், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்டவற்றை இந்திய அணிக்கு தலைமை தாங்கி வென்று கொடுத்தார். மேலும், இவரது கேப்டன்ஷிப் கீழ் இந்திய அணி தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: 


கடந்த 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி முன்னாள் இந்திய கேப்டன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். முன்னதாக,  2014-15 பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோல், கடந்த 2017ம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் பதவியிலிருந்தும் தோனி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகள், 350 ஒருநாள் போட்டிகள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடி 17,266 ரன்களை குவித்துள்ளார். அவர் 16 சதங்களையும் 106 அரை சதங்களையும் பதிவு செய்துள்ளார். 10,599 ரன்கள் குவித்து, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ரன் எடுத்த ஐந்தாவது வீரர் ஆவார்.