மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் வங்காளதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்ற நிலையில், இன்று தன்னுடைய மூன்றாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டது.


இந்த போட்டித்தொடரில் சில்ஹெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும், ஐக்கிய அரபு அணியும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.


இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ரிச்சா கோஷ் முதல் ஓவரிலே டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மேக்னா 10 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஹேமலதாவும் 2 ரன்களில் ரன் அவுட்டாக இந்திய அணி 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து துடுமாறியது. பின்னர், தீப்திஷர்மாவும், ரோட்ரிக்சும் ஜோடி சேர்ந்தனர்.






4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்களது அதிரடியால் இந்திய அணியின் ஸ்கோர் 100 ரன்களை கடந்தது. அதிரடியாக இருவரும் அரைசதம் விளாசினர். அணியின் ஸ்கோர் 148 ரன்களை எட்டியபோது தீப்தி ஷர்மா ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 64 ரன்களை விளாசினார். இந்திய அணி கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களை 5 விக்கெட்டுகுளை இழந்து எடுத்தது. ரோட்ரிக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்கமால் 45 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 75 ரன்களுடன் களத்தில் இருந்தார்.








179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் தீர்த்த சதீஷ், ஈஷா ரோகித் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நடாஷாவும் டக் அவுட்டானார்.


5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கவிஷாவும், குஷிசர்மாவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டாலும் பந்துகளை வீணடித்தனர். குஷிசர்மா 50 பந்துகளில் 29 ரன்களுடன் அவுட்டானார். கடைசியில் 20 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரக அணி 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதனால், இந்திய அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக பெறும் 3வது வெற்றி ஆகும்.