8வது மகளிர் ஆசிய கோப்பை தொடர் பங்களாதேஷ் நாட்டின் சில்ஹெட் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய மகளிர் அணி முதல் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் மகளிர் அணியும் முதல் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


 


இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் கைநத் இம்டியாஸ் இடம்பெற்றுள்ளார். இவருடைய தாய் சலிமா இம்டியாஸ் இந்தத் தொடரில் நடுவராக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக கைநத் இம்டியாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அது வேகமாக வைரலானது. 


 






இந்தச் சூழலில் நேற்று தன்னுடைய தாய் சலிமா இம்டியாஸ் உடன் சேர்ந்து எடுத்து கொண்ட படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் கைநத் இம்டியாஸ் பாகிஸ்தான் ஜெர்ஸியிடனும், தாய் சலிமா இம்டியாஸ் நடுவர் உடையிலும் இருக்கிறார்கள். ஒரு தொடரில் தாய் மற்றும் மகள் இடம்பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சலிமா இம்டியாஸ் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா-இலங்கை மகளிர் அணி போட்டியில் நடுவராக செயல்பட்டார்.


 






முன்னதாக இதுகுறித்து கைநத் இம்டியாஸ், “ஆசிய கோப்பை தொடரில் நடுவராக என்னுடைய தாய் சலிமா இம்டியாஸ் செயல்படுகிறார். பாகிஸ்தான் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பது அவருடைய கனவு. அதை நான் தற்போது நிறைவேற்றி வருகிறேன். தற்போது அவரும் பாகிஸ்தான் சார்பில் களமிறங்க உள்ளார். இதற்காக ஆவலடன் காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.


மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி இன்று யுஏஇ அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 6 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.