இந்த ஆண்டு(2025) மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக, ஆண்டின் தொடக்கத்திலேயே அயர்லாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
2025-ல் நடைபெறும் மகளிர் உலகக்கேப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி
13-வது உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த முறை போட்டிகளை இந்தியா நடத்துவது உறுதியாகியுள்ளது. 1978, 1997, 2013-ம் ஆண்டுகளுக்குப் பிறகு, 4-வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்துகிறது. உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்குபெறும் பட்சத்தில், அந்த அணி விளையாடும் போட்டிகளை, இந்தியா அல்லாத வேறு ஒரு பொது இடத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட இதுவரை தகுதி பெற்றுள்ள அணிகள் எவை?
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 8 அணிகள் விளையாட உள்ளன. இதற்காக, 2022-ல் தொடங்கி 10 அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர்களின் அடிப்படையில், உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒவ்வொரு அணியும் தகுதி பெறுகின்றன.போட்டியை நடத்தும் இந்திய அணி நேரடியாக தகுதிபெறும் நிலையில், அடுத்த 5 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதிபெறும். அந்த வகையில் இதுவரை, போட்டியை நடத்தும் இந்திய அணி தவிர, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாகவும், அடுத்த இடங்களை பிடிக்கும் அணிகள் மகளில் உலகக்கோப்பை குவாலிஃபையர் போட்டிகளுக்கு தகுதி பெறும். எனினும், குவாலிஃபையர் போட்டிகளுக்கு தகுதி பெறும் அணிகளில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணி, உலகக்கோப்பையில் விளையாடும். இதில், உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி இன்னும் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையே 3 ஒருநாள் போட்டிகள்
மகளிர் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில், அதற்கான பயிற்சியாக, தற்போது ஆண்டின் தொடக்கத்திலேயே அயர்லாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதற்காக அயர்லாந்து அணி இந்தியாவிற்கு வந்துள்ளது. அதன்படி, இன்று(10.01.2025) இந்தியா-அயர்லாந்து மகளிர் அணிகளுக்கிடையே முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, இன்னும் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளன. அந்த போட்டிகள், ஜனவரி 12 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணிக்கு தலைமை தாங்குகிறார். தீப்தி ஷர்மா துணை கேப்டனாக செயல்படுகிறார். வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங்கிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், சைமா தாகூர், டைட்டஸ் சாது ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த ஒருநாள் தொடரை, இந்திய மகளிர் அணி கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.