இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் மோதிய டி20 தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று ஹோவ் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக எம்மா லாம்ப் மற்றும் பியூமண்ட் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்திலேயே சொற்ப ரன்களின் வெளியேற, இங்கிலாந்து அணியை 100 ரன்களுக்குள் 5 விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணி பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.
5 வதாக உள்ளே வந்த டேனியல் வியாட் களம் கண்டது முதல் நிதான ஆட்டத்தை வெளிபடுத்த, இவருக்கு பக்கபலமாக டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் சிறப்பான ஆட்டதை வெளிபடுத்தினர். இவர்களது முயற்சியால் ஒரு கட்டத்தில் 200 கடக்குமா என்ற நிலைமையில் இருந்த இங்கிலாந்து அணி 200 ரன்களை கடந்தது.
டேனியல் வியாட்டை அரை சதம் அடிக்க விடாமல் தீப்தி சர்மா கிளீன் போல்டாக்கினார். தொடர்ந்து அசத்திய டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் 61 பந்துகளில் 50 எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர்.
இதையடுத்து 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது. டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் 50 ரன்களுடனும், சார்லோட் டீன் 24 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 2 விக்கெட்களும், கோஸ்வாமி, மேக்னாசிங், கயக்வாட், சினே ராணா மற்றும் ஹர்லீன் தியோல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா களமிறங்கினர். ஷஃபாலி வர்மா 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, மந்தனாவுடன் ஜோடி சேர்ந்த விக்கெட் கீப்பர் யாஸ்திகா பாட்டியா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்த, தொடர்ந்து நிலைத்து நின்று ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாட்டியா 50 ரன்களில் வெளியேறினார். அடுத்து அதிரடி ஆட்டம் ஆடிய ஸ்மிருதி மந்தனா சதம் அடிப்பார் என்று நினைத்தபோது கேட் கிராஸ் வீசிய 37 வது ஓவரில் 91 ரன்களுடன் டேவிட்சன் ரிச்சர்ட்ஸிடம் கேட்சானார்.
அடுத்து களம் கண்ட இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 94 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இந்திய அணி 44. 4 ஓவர்களில் 232 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹர்மன்ப்ரீத் கவுர் 74 ரன்களுடனும், ஹர்லீன் தியோல் 6 ரன்களுடனும் கடைசிவரை களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.