வங்கதேச மகளிர் அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.


வங்கதேசத்தில் சுற்றுப்பயணம்


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு வங்கதேச அணியுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஜூலை 9 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்திய மகளிர் அணியில் 6.2 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என கணக்கில் முன்னிலை வகித்தது. 


2வது டி20 போட்டி


இதனிடையே இன்று 2வது டி20 போட்டி மிர்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் கண்ட அந்த அணி வீராங்கனைகளில் ஸ்மிருதி மந்தனா (13), ஷஃபாலி வர்மா (19), யாஷ்டிகா பாட்டியா (11), தீப்தி ஷர்மா (10), அமன்ஜோத் கவுர் (14) இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். ஆனாலும் 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் சுல்தானா காதுன் அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 


இதனைத் தொடர்ந்து 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேச மகளிர் அணி களம் கண்டது. ஆனால் நாங்க எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா? என்பதைப் போல இந்திய அணியினர் சிறப்பாக பந்து வீசினர். அந்த அணியில் கேப்டன் நிகர் சுல்தானா அதிகப்பட்சமாக 38 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக கடைசி 4 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதுவும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தனர்.


இதன்மூலம் வங்கதேச மகளிர் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3வது போட்டி வரும் ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது.