இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரோகித் ஷர்மா கேப்டன்ஷிப்பை பற்றி விமர்சித்து கூறியவதாவது, "ரோகித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபோது நான் அவரிடம் அதிகம் எதிர்பார்த்தேன். இந்திய மண்ணில் விளையாடி வெற்றி பெருவது சாதாரண விஷயம்தான். உண்மையான பலப்பரீச்சை வெளிநாடுகளில் விளையாடி வெற்றி பெருவதே. ரோஹித் ஷர்மாவின் கேப்டன்ஷிப் நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அவரின் செயல்பாடுகள் எனக்கு ஏமாற்றமே அளிக்கிறது. 


டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா கேப்டன்ஷிப் பெருமையாக பேசும் அளவிற்கு ஒன்றும் இல்லை. ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றவரும், 100 போட்டிகளுக்கும் மேலாக கேப்டனாக இருந்தவருமான ரோஹித் ஷர்மா கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இறுதி சுற்றுக்கு கூட அணியை அழைத்து செல்ல முடியவில்லை.”


உலக  டெஸ்ட் சாம்பியன் போட்டியில் தோல்வி


”லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் குறித்து பல கேள்விகள் கேட்கபட்டன.  டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது ஏன் என்று கேட்டதற்கு, மேகமுட்டமாக இருந்ததால் பீல்டிங்கை தேர்வு செய்தோம் என்று கூறினர், அது கூட பரவாயில்லை. 


ஆனால் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள தெரியாது என அறிந்தும், அவர் 80 ரன்களுக்கு மேல் எடுத்த பிறகுதான் பவுன்சர் பந்துகளை இந்திய அணியின் வீரர்கள் வீச தொடங்கினர். இதனை முன்பே செய்திருந்தால் என்ன? இதற்கான பதிலை கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் கூறவேண்டும்” கவாஸ்கர் என்று ஆதங்கத்துடன் பேசினார்.


பயிற்சி ஆட்டம் வேண்டும்


மேலும் பேசிய கவாஸ்கர், “உண்மையை கூறவேண்டும் என்றால் ஒவ்வொரு பெரிய தொடருக்கு முன்னால் முன்னணி வீரர்கள் முன்கூட்டியே பயிற்சியை தொடர வேண்டும். ஆனால் அவர்கள் யாரும் அப்படி பயிற்சி தொடங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் எப்படியும் அணியில் தேர்வாகி விடுவார்கள் என்று அவர்களுக்கு தெரியும். போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகுவதற்கு 15 நாட்களுக்கு முன்பாக  இரண்டு பயிற்சி ஆட்டங்கள் விளையாட வேண்டும். அதில் ஜூனியர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களின் திறமை வெளிப்படும் அத்துடன், சீனியர் வீரர்களுக்கு பொறுப்பும் வரும்.” என கூறினார்.