இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று முதல் 3 விதமான வடிவங்களிலும் இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இரு அணிகளுக்கும் இடையே ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இந்த பயணம் இன்று முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது.


இந்த டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.  கடைசியாக 1984ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் டெஸ்ட் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 


40 ஆண்டுகளுக்கு பிறகு..


ஆஸ்திரேலியா இதுவரை இந்தியாவில் ஒரே ஒரு டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. கடந்த 1983/84 சுற்றுப்பயணம் நான்கு டெஸ்ட் போட்டிகளை கொண்டிருந்தது. இந்த 4 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் கடைசியாக 1984 பிப்ரவரியில் இந்த மைதானத்தில் இந்தியாவில் டெஸ்ட் விளையாடியது.


இந்தநிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுரும், ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலியும் கேப்டனாக செயல்படுகின்றனர். 


46 வருடங்களாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய 10 டெஸ்டில் ஒரு போட்டியில் கூட இந்தியா வெற்றி பெறவில்லை. 


போட்டியை எங்கே, எப்படி நேரடியாகப் பார்ப்பது..?
 


இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய பெண்கள் அணிகளுக்கு இடையிலான இந்த ஒரே டெஸ்ட் போட்டி ஸ்போர்ட்ஸ்18 சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதே நேரத்தில், இந்த போட்டியின் நேரடி ஸ்ட்ரீமிங்கை ஜியோ சினிமாவின் ஆப்பில் நேரடியாக காணலாம். இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 


இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம்:


டெஸ்ட் போட்டி முடிந்ததும் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ளது. முதல் போட்டி டிசம்பர் 28ஆம் தேதியும், இரண்டாவது போட்டி டிசம்பர் 30ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஜனவரி 2ஆம் தேதியும் நடைபெறும். இந்த மூன்று போட்டிகளும் வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து டி20 தொடர் ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடரின் அனைத்து போட்டிகளும் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது.


இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய அணி: 


டார்சி பிரவுன், லாரன் சீட்டில் (டெஸ்ட் மட்டும்), ஹீதர் கிரஹாம், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ் (டி20 மட்டும்), அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட் அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம்.


இந்திய அணி அணி:


ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, சுபா சதீஷ், ஹர்லீன் தியோல், சைகா சிங் தாக் , டைட்டாஸ் சாது, மேக்னா சிங், ராஜேஸ்வரி கெய்க்வாட், பூஜா வஸ்த்ரகர்