ND Vs SA 3rd ODI: இந்தியா - தென்னாப்ரிக்கா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்தியா - தென்னாப்ரிக்கா தொடர்:
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று விதமான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டி-20 தொடரை 1-1 என சமன் செய்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில், தலா ஒரு போட்டியில் வென்று இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளது. தொடர்ந்து, மூன்றாவது போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
3வது ஒருநாள் போட்டி:
இந்நிலையில் பார்ல் நகரில் உள்ள போலந்து பார்க் மைதானத்தில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்ஸ்டாரிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். தொடரை கைப்பற்றும் நோக்கில் இரு அணிகளும் களமிறங்குவதால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பலம், பலவீனங்கள்:
கே.எல். ராகுல் தலைமையிலான இளம் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகிய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக குல்தீப் யாதவ் சுழற்பந்துவீச்சில் அசத்துகிறார். அதேநேரம், இந்திய அணியின் பேட்டிங் என்பது ஏற்ற இறக்கமாகவே உள்ளது. முதல் போட்டியில் தென்னாப்ரிக்க அணி நிர்ணயித்த இலக்கை, அதிரடியாக ஆடி எட்டிப்பிடித்தது. இருப்பினும் இரண்டாவது போட்டியில், கே. எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் தவிர மற்ற அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சொதப்பினர். இதனால், இன்றைய போட்டியில் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியது குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் தென்னாப்ரிக்கா அணி முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினாலும், இரண்டாவது போட்டியில் அபாரமான வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே உத்வேகத்தில் களமிறங்கும் அந்த அணிக்கு, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு கூடுதல் பலமாக உள்ளது. டோனி டி ஜார்ஜி தென்னாப்ரிக்க அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
மைதானம் எப்படி?
போலந்து பார்க் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். காரணம் இதுவரை அங்கு நடந்துள்ள போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே 60 சதவிகிதம் வெற்றியை பதிவு செய்துள்ளது. போலந்து பார்க் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுக்கும் சராசரி ஸ்கோர் 254 ஆக உள்ளது.
உத்தேச அணி விவரங்கள்:
இந்தியா:
கே.எல்.ராகுல் ( கேப்டன்), திலக் வர்மா, அக்சர் படேல், ருதுராஜ் கெய்க்வாட், குல்தீப் யாதவ், சாய் சுதர்சன், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், முகேஷ் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்
தென்னாப்ரிக்கா:
ஐடன் மார்க்ராம் (கேப்டன்), ரீசா ஹென்றிக்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, தப்ரைஸ் ஷம்சி, நான்ட்ரே பர்கர், கேசவ் மஹாராஜ், டோனி டி ஜோர்ஜி, வியான் முல்டர்