இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரை முடித்து கொண்டு அடுத்த மாதம் ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. அங்கு இந்திய அணி 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கருதப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜிம்பாவே தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜிம்பாவே தொடருக்கான அணிக்கு இந்தியாவின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய தீபக் சாஹர் தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணியின் விவரம்:
ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரஷித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்
இந்தியா-ஜிம்பாவே தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தொடங்குகிறது. 18ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி 20ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 22ஆம் தேதி மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரை சமீபத்தில் வென்றது. இந்தச் சூழலில் இந்திய ஒருநாள் அணிக்கு மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்