ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 289 ரன்கள் எடுத்தது.


 


இதைத் தொடர்ந்து 290 ரன்கள் என்ற இலக்குடன் ஜிம்பாவே அணி களமிறங்கியது. அந்த அணியில் சிகந்தர் ராசா தொடக்கத்தில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  சிறப்பாக விளையாடிய சிக்கந்தர் ராஸா அசத்தலாக சதம் அடித்தார். கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் 3வது சதம் விளாசி அசத்தினார். இதனால் ஜிம்பாவே அணி வெற்றி பெற சிக்கந்தர் ராஸா கடைசி வரை களத்தில் இருக்க வேண்டிய சூழல் உருவானது. 


 






ஆட்டத்தின் 49வது ஓவரில் ஷர்துல் தாகூர் வீசிய பந்தை சிகந்தர் ராசா தூக்கி அடிக்க முற்பட்டார். அப்போது அந்தப் பந்தை சுப்மன் கில் சிறப்பாக டைவ் செய்து கேட்ச் பிடித்தார். சிக்கந்தர் ராஸா 3 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் என 95 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் பிடித்த அந்த கேட்ச் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இது தொடர்பான வீடியோவை பார்த்து பலரும் சுப்மன் கிலை பாராட்டி வருகின்றனர். 


 


அந்த கேட்ச் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் அமைந்தது. முன்னதாக இந்திய பேட்டிங்கின் போது அசத்திய சுப்மன் கில் சதம் அடித்தார். இந்தப் போட்டியில் சதம் அடித்து முக்கியமான கேட்ச் ஒன்றையும் பிடித்து இந்திய வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதன்காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அத்துடன் ஆட்ட நாயகன் விருதையும் சுப்மன் கில் வென்றார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் 245 ரன்கள் விளாசியிருந்தார். 


 




ஜிம்பாவே தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.