ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தச் சூழலில் மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இதனால் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 289 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 290 ரன்கள் என்ற இலக்குடன் ஜிம்பாவே அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கயா 6 ரன்களில் தீபக் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சியான் வில்லியம்ஸ் டோனி முன்யோங்கா ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். இதனால் ஜிம்பாவே அணி 16 ஓவர்களின் முடிவில் 80 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கைடானோ 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சியன் வில்லியம்ஸ் 46 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து டோனி முன்யோங்கா 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சிகந்தர் ராசா தொடக்கத்தில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டன் ரெஜிஸ் சக்பாவா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அவர் அதிரடியை காட்ட தொடங்கினார். அவரும் பிராட் எவன்ஸூம் 8வது விக்கெட்டிற்கு ஜோடியாக 100 ரன்கள் சேர்த்தனர்.
சிறப்பாக விளையாடிய சிகந்தர் ராசா அசத்தலாக சதம் அடித்தார். கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் 3வது சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் பிராட் எவன்ஸ் 36 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த போது அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஜிம்பாவே அணி வெற்றி பெற சிகந்தர் ராசா கடைசி வரை களத்தில் இருக்க வேண்டிய சூழல் உருவானது.
ஆட்டத்தின் 49வது ஓவரில் ஷர்துல் தாகூர் வீசிய பந்தை சிகந்தர் ராசா தூக்கி அடிக்க முற்பட்டார். அப்போது அந்தப் பந்தை சுப்மன் கில் சிறப்பாக டைவ் செய்து கேட்ச் பிடித்தார். சிகந்தர் ராசா 3 சிக்சர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் என 95 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து ஜிம்பாவே அணி 50 ஓவர்களின் முடிவில் 276 ரன்களுக்கு ஜிம்பாவே அணி ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது.
மேலும் படிக்க:முதல் பந்திலேயே ஜிம்பாவே வீரருக்கு மன்கட் எச்சரிக்கை கொடுத்த தீபக் சாஹர்.. வைரல் வீடியோ...