உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை தொடர்ந்து இந்திய அணி தனது அடுத்த சுற்றுப்பயணத்திற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 3 விதமான தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை 12 (நாளை) முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க்கில் நடக்கிறது. 


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சராசரி 48.72 லிருந்து 50 ஆக உயர்த்த வேண்டும். கோலி 2014 மற்றும் 2019 க்கு இடையில் 62 போட்டிகளில் 5695 ரன்கள் எடுத்துள்ளார். இந்த நேரத்தில் அவரது பேட்டிங் சராசரி 58.71 ஆக இருந்தது. அதன்பிறகு கோலியின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. 2019 முதல் விராட் கோலி 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1277 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2019 முதல் 26.69 ஆக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். 


இந்தநிலையில், இந்த தொடரில் விராட் கோலி ஒரு வித்தியாசமான சாதனையை படைக்க இருக்கிறார் என்பது பலரும் அறியாத கதை.


இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பிறகு, வெளிநாட்டு மன்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை-மகன் ஜோடியை எதிர்கொள்ளும் 2வது இந்தியர் என்ற பெருமையை கோலி படைக்க இருக்கிறார்.


சச்சின் டெண்டுல்கர் கடந்த 1992 ம் ஆண்டு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜெஃப் மார்ஷை எதிர்கொண்டார். அதனை தொடர்ந்து, ​​2011-2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஜெஃப் மார்ஷின் மூத்த மகன் ஷான் மார்ஷிற்கு எதிரான போட்டியில் விளையாடினார். இதன்மூலம் தந்தை மற்றும் மகனுக்கு எதிராக விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை சச்சின் டெண்டுல்கர் படைத்தார். 


விராட் கோலி கடந்த 2011ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பாலை எதிர்கொண்டார். இது கோலியின் முதல் டெஸ்ட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், வருகின்ற ஜூலை 12 ஆம் தேதி (நாளை) ஷிவ்நரைனின் மகன் டேகனரைன் சந்தர்பாலை எதிர்கொள்கிறார். டேகனரைன் சந்தர்பாலுக்கு இது 7வது சர்வதேச டெஸ்டாகும். 


இதன்மூலம், விராட் கோலி வெளிநாட்டு மண்ணில் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை-மகன் ஜோடியை எதிர்கொள்ளும் 2வது இந்தியர் என்ற பெருமையை படைக்க இருக்கிறார். 


வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி: 


ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிசந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி:


கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், அலிக் அதானாஸ், டேகனரைன் சந்தர்பால், ரஹ்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்சார்ரி ஜோசப், கிர்க் மெக்மார்க்மன் ரெசிபர், கிர்க் மெக்மர் ரோச், ஜோமெல் வாரிக்கன்.