தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 2 போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 


திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் குவாலிபையர் 2 போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களாக விமல் குமார் மற்றும் சிவம் சிங் களமிறங்கினர். 16 ரன்கள் எடுத்திருந்த விமல் குமார் வெறும் 16 ரன்களில் நடையைகட்ட, மறுமுனையில் இருந்த சிவம் சிங் கிடைக்கும் பந்துகளை எல்லாம் சிக்ஸர்களுக்கு அனுப்பி கொண்டு இருந்தார். இவருக்கு உறுதுணையாக களமிறங்கிய பூபதி குமாரும் தன் பங்கிற்கு 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். 


அதிரடியாக விளையாடிய சிவம் சிங் 46 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடித்து 76 ரன்களில் வெளியேறினார். கடைசி நேரத்தில் உள்ளே வந்த கேப்டன் இந்திரஜித் 5 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 13 ரன்கள் அடிக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. 


நெல்லை அணி சார்பில் சோனு யாதவ் 2 விக்கெட்களும், வாரியர், பொய்யாமொழி மற்றும் லக்சய் ஜெயின் தலா 1 விக்கெட்களும் எடுத்திருந்தனர். 


வெற்றிக்கு 186 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய கேப்டன் அருண் கார்த்திக் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அளித்தார். மற்றொரு தொடக்க வீரர் சுகேந்திரன் போராடி 22 ரன்கள் எடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தார். நிதிஷ் ராஜகோபால் 27 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்தபோதும் ரிடையர்ட் ஹெட் ஆகி வெளியேற, அஜிதேஷ் தனி ஒருவராக போராடி கொண்டிருந்தார். 


நெல்லை ராயல் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 21 பந்துகளில் 57 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அடுத்து உள்ளே வந்த ரித்திக் ஈஸ்வரன் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டு நம்பிக்கை அளித்தார். இதன்மூலம் நெல்லை அணி ஐசிஎல் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) குவாலிபையர்-2 ஆட்டத்தில் ராயல் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 


கடைசி இரண்டு ஓவர்களில் 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரித்திக் 19வது ஓவரின் முதல் மூன்று பந்துகளை மூன்று சிக்ஸர்களுக்கு விரட்ட, அஜிதேஷ் ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார். பந்து வீசிய கிஷோர் கடைசி பந்தை நோ-பாலுக்கு வீச, ரித்திக் கடைசி பந்தை ஃபைன்-லெக்கில் ஸ்கூப் செய்து அசத்தினார்.






தொடர்ந்து 20 வது ஓவரில் மீதமுள்ள 4 ரன்களை எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கோவை லைகா கிங்ஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.