Yashasvi Jaiswal Record: இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்துள்ள இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அறிமுகப்போட்டியில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது. மொத்தம் 2 டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டி என ஒரு மாத ப்ளேயிங் ப்ளேனுடன் வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணியில் புதிதாக சேர்க்கப்பட்ட வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இவர் ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இணைக்கப்பட்டிருந்தாலும், ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
இந்த தொடரிலும் அணியில் மட்டும் தான் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் இந்த தொடரில் அறிமுகமாகிறார் எனக் கூறியதுடன், தொடக்க வீரராக என்னுடன் களம் காண்பார் என போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.
அதன்படி ரோகித்துடன் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரோகித் சர்மாவின் நம்பிக்கையையை மட்டும் இல்லாமல், அனைவரது நம்பிக்கையையும் காப்பாற்றியதுடன், உலக கிரிக்கெட் அரங்கில் தனக்கான தனி இடத்தை இப்போதே பிடித்துவிட்டார். சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் ருத்ரதாண்டவமாடினார். இன்னும் சொல்லப்போனால் இளம் வயதில் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுகென உள்ள பேட்டிங் ஃபார்மான பந்தை தூக்கி ஆடாமல் தரையோடு தட்டி தட்டி ரன்கள் சேர்த்தார். மொத்தம் 387 பந்துகளைச் சந்தித்த அவர் அதில் 16 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசி 171 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த மூன்றாவது இந்திய வீரராகியுள்ளார். மேலும் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய 17வது இந்திய வீரராகவும் தன்னை இணைத்துள்ளார் ஜெய்ஸ்வால்.
இதற்கு முன்னர், ஷிகர் தவான் 2013 ஆம் ஆண்டு மொஹாலி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் வெறும் 174 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட ஷிகர் தவான் 33 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என்று மொத்தம் 187 ரன்கள் அடித்து அறிமுகப் போட்டியில் ஒரு ருத்ரதாண்டவத்தையே ஆடியிருந்தார்.. இந்திய அளவில் இவர் தான் இதுவரை அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையுடனும் உள்ளார்.
அதேபோல், ரோகித் ஷர்மா 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டில் களமிறங்கினார். அந்த போட்டியில் 177 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த மைதானம் ரோகித் சர்மாவுக்கு மிகவும் ராசியான மைதானம் என்பதும், இங்குதான் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசினார் என்பதும் கூடுதல் தகவலாகும்.