மேற்கிந்தியத் தீவுகளுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரின் ஐந்தாவது போட்டி தொடரை நிர்ணயிக்கும் போட்டியாக இருந்த நிலையில், 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த இந்திய அணி தொடரை இழந்தது.


தொடரை இழந்த இந்திய அணி


புளோரிடா-வின் லாடர்ஹில்லில் நடந்த ஐந்தாவது டி20 போட்டியில் பிராண்டன் கிங் மற்றும் ரொமாரியோ ஷெஃபர்ட் ஜோடியைப் பிரிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரை 3-2 என கைப்பற்றியது.


தோல்விக்கு பின் பேசிய இந்தியா அணி கேப்டன் பாண்டியா, இந்த போட்டிகளில் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம் என்றார். மேலும் விரும்பிய முடிவைப் பெறாமல் இருப்பதை, எல்லா நேரத்திலும் பொருட்படுத்த வேண்டியது இல்லை என்றார். டாஸ் வென்ற பிறகு பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 165 ரன்களை மட்டுமே எடுத்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மாவின் கேமியோவைத் தவிர, வேறு யாராலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. 



டாஸ் குறித்து பேசிய பாண்டியா


அணி தன்னைத்தானே சவால் செய்துகொள்ள வேண்டும் என்று பாண்டியா தனது டாஸ் முடிவு குறித்து பேசினார். "ஒரு குழுவாக நாம் நம்மை நாமே சவாலுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். இந்த விளையாட்டுகள் அனைத்தும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விளையாட்டுகள். நாங்கள் ஒரு குழுவாக பேசினோம், எப்பொழுது கடினமான வழியை எடுக்க முடியுமோ அப்போதெல்லாம் நாங்கள் எடுத்துள்ளோம்," என்று பாண்டியா தோல்விக்குப் பிறகு கூறினார். "பின்னோக்கிப் பார்த்தால், ஆங்காங்கே ஒரு தொடர் இழப்பது முக்கியமில்லை, ஆனால் இலக்குக்கான அர்ப்பணிப்பு முக்கியமானது," என்று அவர் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: Cricket Records: சோதனையும், சாதனையும்..! சூர்யகுமார் யாதவ் சம்பவம், மோசமான வரலாறு படைத்த ஹர்திக் பாண்ட்யா..!


தோல்வி சில நேரங்களில் நல்லது


2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் விளையாடப்பட உள்ளது. ஆனால் பாண்டியா தற்போது அவ்வளவு தூரம் பார்க்கவில்லை. "அதற்கு வெகுதூரம் உள்ளது, ஒருநாள் உலகக் கோப்பை வரவிருக்கிறது. சில சமயங்களில் தோல்வியடைவது நல்லது. அதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ளலாம். மேலும் அனைத்து இளம் வீரர்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும். எல்லோரும் அவர்களை சிறப்பாக வெளிப்படுத்தினர். வெற்றி, தோல்வி ஒரு பகுதிதான். நாம் செய்யும் செயலும், நாம் அதிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம் என்பதும்தான் முக்கியம்," என்று ஹர்திக் கூறினார்.



இளம் வீரர்கள் நன்றாக ஆடினார்கள்


இருப்பினும், இந்த சுற்றுப்பயணத்தில் அறிமுகமான இளம் வீரர்களான திலக் வர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ஹர்திக் முழு பாராட்டுகளைத் தெரிவித்தார். "அவர்கள் பலர் இதயங்களை வென்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் இது மிகவும் முக்கியமான விஷயம். ஒவ்வொரு இளைஞனுக்கும் நம்பிக்கை இருக்கிறது. நான் இப்போது அடிக்கடி பார்க்கும் விஷயம் இந்த இளம் வீரர்களின் நம்பிக்கை. அவர்களுக்கு பாராட்டுக்கள், அவர்கள் பொறுப்பை ஏற்று ஆடுகின்றனர். முடிவுகளைப் பொருத்தவரை ஒரு கேப்டனாக என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது,” என்று கூறினார்.