வெஸ்ட் இண்டீஸ் -இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி நேற்று அமெரிக்காவில் உள்ள புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்களுக்குள் சுருண்டது. 


இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக அர்ஷீப்தீப் 3 விக்கெட்களும், ஆவேஷ்கான், அக்சார் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். முக்கிய இரண்டு விக்கெட்களை கைப்பற்றிய ஆவேஷ்கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 


ரோஹித் சர்மா ஒருநாள் தொடரில் ஓய்வெடுக்கப்பட்ட பின்னர் இந்த தொடரில் மீண்டும் அணியை வழிநடத்தி, நல்ல பார்மில் உள்ளார். அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில், இந்திய கேப்டன் பேட்டிங்கின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 16 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 33 ரன்கள் எடுத்தார். 


இதன் மூலம் ரோகித் சர்மா அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் 16,000 ரன்கள் எடுத்த ஏழாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்த சாதனையை சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விராட் கோலி, வீரேந்திர சேவாக் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் பெற்றுள்ளனர். 


16,000 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியல் :



  • சச்சின் டெண்டுல்கர்- 34,357

  • ராகுல் டிராவிட்- 24,064

  • விராட் கோலி - 23,726

  • சவுரவ் கங்குலி- 18,433

  • எம்எஸ் தோனி- 17,092

  • வீரேந்திர சேவாக்- 16,892

  • ரோஹித் சர்மா- 16,000


ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 9,376 ரன்களும், டி20 போட்டிகளில் 3,487 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 3,137 ரன்களும் எடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் 16,000 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், தொடக்க ஆட்டக்காரராக டி20 போட்டிகளில் 3,000 ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார். நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் 3,119 ரன்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண