வெஸ்ட் இண்டீஸ் -இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டி20 போட்டி நேற்று அமெரிக்காவில் உள்ள புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்களுக்குள் சுருண்டது.
இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரையும் 3- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி சார்பில் அதிகப்பட்சமாக அர்ஷீப்தீப் 3 விக்கெட்களும், ஆவேஷ்கான், அக்சார் பட்டேல் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். முக்கிய இரண்டு விக்கெட்களை கைப்பற்றிய ஆவேஷ்கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இந்த நிலையில், இந்த போட்டியின்போது மைதானத்தில் இருந்து ரசிகர்கள் ரோகித்... ரோகித்.. என்று குரலெழுப்பினர். இதனால் உற்சாகமடைந்த ரோகித் சர்மா, ரசிகர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேராக சென்று ரசிகர்கள் அனைவருக்கும் கைகொடுத்தார். ரோகித் சர்மா கைகொடுத்தால் ரசிகர்கள் பெரும் கூச்சல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். சுமார் 31 வினாடி வெளியான வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் 50 ஐ கடந்த ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக 50-க்கும் மேற்பட்ட ஸ்கோர்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் விராட் கோலியை முந்தி முதலிடம் பிடித்தார்.
விராட் கோலி 30 அரைசதத்துக்கு மேல் ஸ்கோருடன் இரண்டாவது இடத்திலும், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் மற்றும் 27 அரை சதங்களுடன் ரோஹித் சர்மா முதலிடத்திலும் உள்ளனர். கோஹ்லி டி20 போட்டியில் சதம் அடிக்கவில்லை. தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், டி20யில் ஒரு சதம் உட்பட 27 ஐம்பது பிளஸ் ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
35 வயதான ரோகித்சர்மா 45 டெஸ்ட் போட்டிகளில் 64 சிக்ஸர்களையும், 128 டி20 போட்டிகளில் 163 சிக்ஸர்களையும், 233 ஒருநாள் போட்டிகளில் 250 சிக்ஸர்களையும், 227 ஐ.பி.எல். போட்டிகளில் 240 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித்சர்மா டெஸ்ட் போட்டியில் 3 ஆயிரத்து 137 ரன்களையும், ஒருநாள் போட்டியில் 9 ஆயிரத்து 376 ரன்களையும், டி20 போட்டியில் 3 ஆயிரத்து 487 ரன்களையும், ஐ.பி.எல். போட்டிகளில் 5 ஆயிரத்து 879 ரன்களையும் விளாசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்