உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இந்திய அணி வரும் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அந்த அணிக்கு எதிராக ஆடுகிறது. போட்டி அட்டவணைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:


இதில், டோமினிகாவில் வரும் ஜூலை மாதம் 12-ந் தேதி தொடங்க உள்ள டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித்சர்மா தலைமையிலான வீரர்கள் பட்டியலில் அனுபவ வீரரான புஜாராவிற்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல, வேகப்பந்துவீச்சாளரான உமேஷ் யாதவிற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா முதல் இன்னிங்சில் 14 ரன்களையும், 2வது இன்னிங்சில் 27 ரன்களை மட்டுமே எடுத்தார். மைதானத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அதுவும் நடக்கவில்லை. இங்கிலாந்து மண்ணில் கவுண்டி கிளப் போட்டிகளில் ஆடி நிறைந்த அனுபவம் கொண்ட புஜாரா இறுதிப்போட்டியில் சொதப்பியது இந்திய ரசிகர்களுக்கு மட்டுமின்றி, பி.சி.சி.ஐ.க்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது.


கழட்டி விடப்படும் புஜாரா, உமேஷ்:


ஆஸ்திரேலியாவை காட்டிலும் பலமிகுந்த அணியாகவே களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தோற்றதால் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதேபோல, பந்துவீச்சில் அசத்துவார் என்று நம்பிக்கை வைக்கப்பட்ட உமேஷ் யாதவும் ஏமாற்றத்தையே தந்தார். முதல் இன்னிங்சில் 23 ஓவர்கள் வீசிய அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. 2வது இன்னிங்சில் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகள் இந்திய அணிக்கு புது ரத்தத்தை பாய்ச்ச வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. இதன் முதற்கட்டமாகவே தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் புஜாராவையும், உமேஷ் யாதவையும் பி.சி.சி.ஐ. கழற்றிவிட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் அடுத்த தலைமுறைக்கான வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?


ராகுல் டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் பெருஞ்சுவராக கருதப்பட்ட புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகவே இதன்மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.  டெஸ்ட் வீரர் என்று முத்திரை குத்தப்பட்ட புஜாராவிற்கு ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அணியில் இடமே வழங்கப்படுவது இல்லை. தற்போது, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட உமேஷ் யாதவும் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பாரா? என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.


35 வயதான புஜாரா 2010ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 2014ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடாத புஜாரா அதன்பின்பு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வருகிறார். தற்போது வரை அவர் 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 19 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 இரட்டை சதங்கள், 35 அரைசதங்கள் உள்பட 7 ஆயிரத்து 195 ரன்களை விளாசியுள்ளார். 5 ஒருநாள் போட்டிகளில் ஆடி 51 ரன்களையும், 30 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 390 ரன்களையும் எடுத்துள்ளார்.


35 வயதான உமேஷ் யாதவ் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 170 விக்கெட்டுகளையும், 75 ஒருநாள் போட்டிகளில் ஆடி 106 விக்கெட்டுகளையும், 9 டி20 போட்டிகளில் ஆடி 141 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 136 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.  


Abpnadu டெலிகிராமில் இணைய: https://t.me/abpnaduofficial