ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது T20I போட்டியிலும் இந்திய அணி நேற்று (ஆகஸ்ட் 6) வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை சந்தித்ததால், தொடரில் தற்போது 2-0 என்று இந்திய அணி பின்தங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை போராடி வென்றது. 153 ரன்களைத் துரத்திய அந்த அணியின், நிக்கோலஸ் பூரன் இந்திய அணி பந்துவீச்சை திறம்பட கையாண்டு வெற்றியை எளிதாக்கி தந்தார். இருப்பினும் அதனை மோசமாக தான் மற்ற வீரர்கள் பயன்படுத்தினர். எளிதாக வெல்லலாம் என்ற நல்ல நிலையில் இரண்டு பேட்ஸ்மேன்கள் களத்தில் நின்றனர். அதன் பிறகு வெறும் 3 ரன்களில் 4 விக்கெட்டுகளை விட்டு திடீரென இரண்டு பந்து வீச்சாளர்கள் களத்திற்கு வந்தனர். 126 ரன்களில் 4 விக்கெட் இழந்து இருந்த அணி, 129 ரன்னுக்குள் 8 விக்கெட் ஆனது. 



வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி


ஆனால் பெரிதாக பேட்டிங் அனுபவமற்ற அகில் ஹொசைன் மற்றும் அல்சாரி ஜோசப் ஆகியோர் எப்படியோ தட்டு தடுமாறி வெற்றிக்கு இழுத்து சென்றனர். அல்சாரி ஜோசப் அடித்த சிக்ஸர் பெரும் திருப்பமாக இருந்தது. இதனால் ஒரு ஓவர் மிச்சம் வைத்து அந்த அணி வெற்றியை பெற்றது. இந்திய அணிக்கு கிட்டத்தட்ட வெல்லும் வாய்ப்பு கிடைத்ததும் தவற விட்டது. இது குறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா போட்டிக்குப் பிந்தைய நேர்காணலில் விரக்தியுடன் பேசினார். பேட்டிங் செயல்திறன் குறித்து பாண்டியாவிடம் கேட்டபோது, இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும் விதத்தில் அவர் அதிருப்தி அடைந்ததாக குறிப்பிட்டார். சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் குறைந்த ரன்னில் வெளியேறினர். ஆனால் பாண்டியா எந்தப் பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக அனைத்து பேட்டர்களையும் விமர்சித்தார்.


தொடர்புடைய செய்திகள்: IND vs WI 2nd t20: சீறிப்பாய்ந்த திலக் வர்மா, புஸ்வானமான இந்தியாவின் மற்ற பேட்ஸ்மேன்கள்.. மே.தீவுகளுக்கு 153 ரன்கள் இலக்கு


பேட்டிங் குறித்து பாண்டியா


"நேர்மையாக சொல்லவேண்டும் என்றால், அது மகிழ்ச்சி அளிக்கும் அளவுக்கான பேட்டிங் செயல்திறன் இல்லை. நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம். 160+ அல்லது 170 ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால்,  நாங்கள் குறைவான ரன்களை மட்டுமே எடுத்தோம். இனிவரும் ஆட்டங்களில் இன்னும் நன்றாக ஆடினால், பந்து வீச்சாளர்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று பாண்டியா கூறினார். இந்திய அணி பந்துவீச்சை தாக்குதல் செய்ய விறுவிறுப்பாக விளையாடிய நிக்கோலஸ் பூரனை இந்திய கேப்டன் பாராட்டினார். "அவர் சுழல் பந்து வீச்சாளர்கள் நன்றாக ஆடுகிறார். அதனால் மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர் கொடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது," என்று அவர் கூறினார்.



தொடர் தோல்வி


"எங்களிடம் சரியான சமநிலை இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகளை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டும், ஆனால் அதே நேரத்தில் பேட்டர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்" என்று இந்திய கேப்டன் மேலும் கூறினார். இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டார். அவர் பேட்டிங்கில் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார், பின்னர் பந்து வீச்சில் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார். இந்திய அணி இப்போது இரு ஆட்டங்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்துள்ளனர். வருகின்ற செவ்வாய்கிழமை மீண்டும் அதே மைதானத்தில் மூன்றாவது T2OI இல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடுவார்கள். இந்த போட்டியை தோற்றால் 12 இருதரப்பு தொடர்களுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு தோல்வியை சந்திக்கும் தொடராக இந்திய அணிக்கு இது இருக்கும் என்பதால், இந்தியாவுக்கு இது கட்டாயம் வெற்றிபெற வேண்டிய போட்டியாக இருக்கும்.