இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் கடைசி போட்டி நேற்று அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியையும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7 ஆவது முறை ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மொத்தமாக 3 போட்டிகளிலும் சேர்த்து 26 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்ன பேசுகிறீர்கள். இது ஒரு கேள்வியா. அவர் சதம் அடிக்கவில்லை என்பதற்காக அவர் ரன் அடிக்கவில்லை என்று கூற முடியாது. அவர் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் இரண்டு அரைசதங்கள் கடந்திருந்தார். ஆகவே அவருடைய ஃபார்ம் தொடர்பாக நாங்கள் கவலைப்பட தேவையில்லை” எனக் கூறினார்.
முன்னதாக விராட் கோலி மூன்றாவது ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆன பிறகு பலரும் அவருடைய ஃபார்ம் தொடர்பாக ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக ரோகித் சர்மாவின் கருத்து அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை. அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி 114* ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் தற்போது 27 மாதங்களாக விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி தற்போது வரை 43 சதங்கள் அடித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ஹைதராபாத் தட்டித்தூக்கிய தமிழக வீரர்... மாஸ் காட்டிய வாஷிங்டன் சுந்தர்