தென்னாப்பிரிக்கா தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதலில் 3 ஒருநாள் போட்டிகளும் அகமதாபாத்தில் நடைபெறுகின்றன. அதன்பின்னர் 3 டி20 போட்டிகளும் கொல்கத்தாவில் நடைபெறுகின்றன. கொரோனா பரவல் காரணமாக இந்தத் தொடருக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பு குறைவு என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணி தொடர்பான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்று கருதப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் திரும்ப உள்ளார். இதற்காக இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் ரோகித் சர்மா தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் அணிக்கு திரும்புவது உறுதியாகியுள்ளது.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு வேகப்பந்து வீச்சாளர் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏனென்றால் தென்னாப்பிரிக்க தொடரில் அவர் அனைத்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதன்காரணமாக அவருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்த அஷ்வின் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டர் என்று கூறப்படுகிறது. அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் குணம் அடையாத காரணத்தால் அவர் இந்தத் தொடரிலிருந்து விலகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது. அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கு ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷி தவான் அணியில் இடம்பிடிப்பார் என்று கருதப்படுகிறது.
டி20 தொடருக்கு தமிழ்நாடு வீரர் ஷாரூக் கான் இடம்பெறவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய இருவரும் இந்தத் தொடரிலும் இடம்பெற மாட்டார்கள் என்று தெரிகிறது. எனவே இந்திய அணியில் ரிஷி தவான் ஒரு ஆல்ரவுண்டராக களமிறங்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முடிந்த விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி ஹிமாச்சலப் பிரதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் ரிஷி தவான் மிகவும் முக்கியமான நபராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் தமிழ்நாடு அணி வெற்றி பெற ஷாரூக் கான் சில முக்கியமான காமியோ இன்னிங்ஸை ஆடினார். ஆகவே டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நேரம் கிடைக்கும்போது விளையாடுங்க..- சச்சின் வைத்த கியூட் கோரிக்கை வீடியோ !