ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் டி20 தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக ஆடி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதும் மூன்றாவது டி20 போட்டி வார்னர் பார்க்கில் மைதானத்தில் மழை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் மற்றும் மேயர்ஸ் களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 57 ரன்களை குவிக்க, நிதானமாக ஆடிய பிராண்டன் கிங், ஹர்திக் பாண்டியா பந்தில் 20 பந்துக்கு 20 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பூரனையும், புவனேஷ்வர் குமார், 22 ரன்களில் வெளியேற்றினார். ஒரு புறம் இரண்டு விக்கெட்கள் சரிந்தாலும், மறுபுறம் ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய மேயர்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 73 ரன்களில் அவுட்டாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரன் வேகம் சட்டென குறைந்தது.
அடுத்தடுத்து மைதானத்தில் களமிறங்கிய ரோவன் பவுல், ஹெட்மயர் 23, 20 ரன்கள் முறையே அவுட்டாகினர். 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்திருந்தது.
165 ரன்கள் எடுத்தால் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதல் அதிரடி காட்டியது. 5 பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து சிறப்பான தொடக்கம் தந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களில் ரிடையர்ட் ஹர்ட் ஆனார். அடுத்து உள்புகுந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யா குமார் யாதவ் ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தது.
சூர்யா குமார் யாதவ் அதிரடியாக விளையாட, அவருக்கு உறுதுணையாக ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடினார். ஷ்ரேயாஸ் ஐயர் 27 பந்துகளில் 24 ரன்கள் அடித்து அகேல் ஹுசைன் பந்தில் வெளியேற, தொடக்கம் முதலே சீறிப்பாய்ந்த சூர்யா குமார் யாதவ் அரைசதம் கடந்தார். 44 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அசத்திய சூர்யா குமார் யாதவ் டோமனிக் பந்தில் அல்ஜாரி ஜோசப்பிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அடுத்தடுத்து களமிறங்கிய பண்ட், தீபக் ஹூடா ரன்கள் அடித்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதன் மூலம் 19 ஓவர்களிலேயே இந்திய அணி 165 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அசத்திய சூர்யா குமார் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்