வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள போர்ட் ஆஃப் ஸ்பெயினின் ஓவல் மைதானத்தில் இன்று அதாவது ஜூலை 20 இந்திய அணி களமிறங்கியுள்ள போட்டி வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டியாக மாறியுள்ளது. 1970-80 கால கட்டத்தில் ஜாம்பவானாக உலா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ள 100வது டெஸ்ட் போட்டி இந்த போட்டி. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
100வது டெஸ்ட்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கடந்த 21 ஆண்டுகாலமாக இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடைந்ததே இல்லை என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளது. இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் 1948ம் ஆண்டு முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடின. அந்த போட்டிக்கு லாலா அமர்நாத் கேப்டனாக இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான் காட்டர்ட் கேப்டனாக இருந்தார். அந்த போட்டி டிராவில் முடிந்தது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை ஆடிய போட்டிகளில் 46 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளது. 23 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 30 டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல், இந்திய அணி தரப்பில் விராட் கோலிக்கு சர்வதேச அளவில் இது 500வது போட்டியாகும். இந்திய கிரிக்கெட் அணியில் தான் அறிமுகமானது முதல் இன்று வரை, தனது ருத்ரதாண்டவ ஆட்டத்தால் எதிரணியினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருபவர் விராட் கோலி, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் அவர் வசம் இல்லாத சாதனைகளே இல்லை. இப்படி இருக்கும்போது வரும் 20ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு எதிராக நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு சர்வதேச போட்டியில் அவரது 500வது போட்டியாக இருக்கும். அதாவது ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டி என அனைத்தையும் சேர்த்து இதுவரை 499 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
110 டெஸ்ட் போட்டிகள்
டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி அறிமுகமானார். அன்று முதல் இதுவரை 110 டெஸ்ட்களில் விளையாடியுள்ள விராட்கோலி, 8 ஆயிரத்து 555 ரன்கள் குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள். இதில் இதுவரை 7 இரட்டைச் சதமும், 28 சதமும், 29 அரைசதமும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியிலும் பந்து வீசியுள்ள விராட் கோலி, இதுவரை 29 ஓவர்கள் வீசி அதில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இதுவரை விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.