ஆசியக் கோப்பை 2023க்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா நேற்று வெளியிட்டார். இந்த ஆசியக் கோப்பையானது ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 15ம் தேதி முடிவடைகிறது. இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மாபெரும் போட்டியானது வருகின்ற செப்டம்பர் 2ம் தேதி இலங்கையின் கண்டி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. ஆசியக் கோப்பை தொடரை பொறுத்தவரை பாகிஸ்தான் அணியை தொடர்ந்து வீழ்த்தி இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கடைசியாக மோதின. அதில், இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்தது. அதேபோல், 2022 ல் நடந்த ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதில், இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றிபெற்றன. 

இதுதவிர ஒருநாள் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த கடைசி 3 ஒருநாள் போட்டிகளிலும், இந்திய அணியே வெற்றிபெற்றது. 2018-ம் ஆண்டு 50 ஓவர் கொண்ட ஆசியக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையே இரண்டு முறை மோதியதில் இந்திய அணி இரண்டு முறையும் வெற்றி பெற்றது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி 2019 உலகக் கோப்பையில் மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் முறையின் கீழ் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா vs பாகிஸ்தான்: கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம்

இந்தியா-பாகிஸ்தான் இடையே கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 7 போட்டிகளிலும்,  பாகிஸ்தான் 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. அதேநேரம், ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டியில் இரு அணிகளும் இதுவரை 13 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில், இதில் இந்தியா 7-ல் வெற்றியும், பாகிஸ்தான் 5 ஆட்டங்களில் வெற்றியும் பெற்றுள்ளன. 1 போட்டியில் முடிவு இல்லை. 

ஆசியக் கோப்பை முழு அட்டவணை: 

தேதி         குரூப் லீக் போட்டிகள் இடம் 
ஆகஸ்ட் - 30     பாகிஸ்தான் vs நேபாளம்  முல்தான் (பாகிஸ்தான்)
ஆகஸ்ட் - 31 வங்கதேசம் vs இலங்கை கண்டி (இலங்கை)
செப்டம்பர் -2 பாகிஸ்தான் vs இந்தியா கண்டி (இலங்கை)
செப்டம்பர் -3 வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -4 இந்தியா vs நேபாளம் கண்டி (இலங்கை)
செப்டம்பர் -5 ஆப்கானிஸ்தான் vs இலங்கை லாகூர் (பாகிஸ்தான்)
  சூப்பர் 4 சுற்றுகள்  
செப்டம்பர் -6 A1 vs B2 லாகூர் (பாகிஸ்தான்)
செப்டம்பர் -9 B1 vs B2  கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -10 A1 vs A2 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -12 A2 vs B1 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -14 A1 vs B1 கொழும்பு (இலங்கை)
செப்டம்பர் -15 A2 vs B2  கொழும்பு (இலங்கை)
  இறுதிப்போட்டி  
செப்டம்பர் -17 சூப்பர் 4 சுற்று - 1 vs 2 கொழும்பு (இலங்கை)