வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள டிரினிடாட் நகரில் நடைபெற்று வரும் கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டம் சற்றுமுன் தொடங்கியது. நேற்றைய போட்டி நேர முடிவில் களத்தில் நின்ற விராட்கோலி – ஜடேஜா ஜோடி ஆட்டத்தை தொடங்கியது.
விராட்கோலி சதம்:
87 ரன்களுடன் களத்தில் நின்ற விராட்கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு ஜடேஜாவும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார். விராட் கோலியின் சதத்திற்காக காத்திருந்த ரசிகர்களை விராட்கோலி சதமடித்து குஷிப்படுத்தினார். சிறப்பாக ஆடிய விராட்கோலி தன்னுடைய 29வது சதத்தை விளாசினார். 180 பந்துகளில் 10 பவுண்டரியுடன் சதத்தை விளாசினார்.
விராட்கோலிக்கு மறுமுனையில் நல்ல ஒத்துழைப்பு அளித்த ஜடேஜா 106 பந்துகளில் தன்னுடைய 19வது அரைசதத்தை விளாசினார். மைதானத்தில் இருவரும் நன்றாக நிலைத்து விட்டதால் இவர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை எதிர்கொள்வது ஒன்றும் பெரியளவில் சிரமமாக இருக்கவில்லை. இருவரையும் பிரிக்க வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
முன்னதாக, இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா – ஜெய்ஸ்வால் சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஜெய்ஸ்வால் 57 ரன்களும், ரோகித்சர்மா 80 ரன்களும் எடுத்தனர். சுப்மன்கில் 10 ரன்களுக்கும், ரஹானே 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
500வது போட்டி:
500வது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ள விராட்கோலி, இந்த போட்டியில் சதம் அடித்திருப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி தற்போது வரை 92 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களுடன் ஆடி வருகிறது. விராட்கோலி 109 ரன்களுடனும், ஜடேஜா 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
34 வயதான விராட்கோலி இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 29 சதங்கள், 7 இரட்டை சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 643 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி 274 ஒருநாள் போட்டிகளில் ஆடி 46 சதங்கள், 65 அரைசதங்களுடன் 12 ஆயிரத்து 898 ரன்கள் குவித்துள்ளார். 115 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 37 அரைசதங்களுடன் 4 ஆயிரத்து 8 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் படிக்க:Indian Team: இங்கிலாந்தை ’ஸ்விங்’கால் சுழற்றியடித்த இஷாந்த் சர்மா.. இதே நாளில் லார்ட்ஸில் இந்திய அணி செய்த சம்பவம்!
மேலும் படிக்க: IND vs PAK: இது நம்ம லிஸ்ட்லயே இல்ல..! இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பாக்க இப்படியெல்லாமா பண்ணுவாங்க..?