கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற பரப்பான போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. இஷான் கிஷான் 2 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் – விராட் ஜோடி நிதானமாகவும், பொறுப்பாகவும் ஆடியது. ரோகித் 19 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட்கோலி பொறுப்புடனும், நிதானத்துடனும் ஆடினர்.


கடந்த சில போட்டிகளில் பார்ம் இல்லாமல் தவித்து வந்த விராட்கோலி, இந்த போட்டியில் பார்முக்கு திரும்பியதுடன் அரைசதமும் அடித்து அசத்தினார். ஆனால், அரைசதம் அடித்த உடனே 52 ரன்களில் விராட்கோலி போல்டானார். பின்னர், ஜோடி சேர்ந்த ரிஷப் பண்டும், வெங்கடேஷ் அய்யரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். இவர்களது பேட்டிங்கால் 15 ஓவர்களில் 124 ரன்களை எட்டிய இந்திய அணி 20 ஓவர்களில் 186 ரன்களை எடுத்தது. வெங்கடேஷ் அய்யர் 18 பந்தில் 33 ரன்களை எடுத்தார். ரிஷப் பண்ட் 28 பந்தில் 52 ரன்களை எடுத்தார்.




தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் 9 ரன்களில் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் பிரண்டன் கிங் 22 ரன்னில் ரவி பிஷ்னோய் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிகோலஸ் பூரண் ஆட்டத்தை அதிரடியாகவே தொடங்கினார். தொடங்கிய சிறிது நேரத்தில் எளிதான கேட்ச் வாய்ப்பை வழங்கினார். ஆனால், அதை ரவி பிஷ்னோய் கோட்டை விட்டார்.


இதன்பின்பு, நிகோலஸ் பூரணும், ரோவ்மென் பாவலும் இந்திய பந்துவீச்சை சகட்டுமேனிக்கு வெளுத்தனர். ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரிகளும், அவ்வப்போது பிரம்மாண்ட சிக்ஸர்களையும் விளாசி இந்திய வீரர்களை கலங்க வைத்தனர். நிகோலஸ் பூரண் அரைசதத்தை கடந்தார். ஆட்டம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில், ரோவ்மென் பாவெல் எளிதாக ஒரு கேட்ச் வாய்ப்பை வழங்கினார்.




ஆனால், மிகவும் உயரத்திற்கு சென்ற அந்த கேட்ச்சை  பிடிக்காமல் புவனேஸ்குமார் கோட்டை விட்டார். இதனால், அவரும் அரைசதம் அடித்தார். இதனால், கடைசியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 12 பந்தில் 29 ரன்கள் தேவை என்ற சூழல் உருவாகியது. ஹர்ஷல் பட்டேல் 18வது ஓவரை சிக்கனமாக வீசிய நிலையில், புவனேஷ்குமர் வீசிய 19வது ஓவரில் டேஞ்சர் பேட்ஸ்மேன் நிகோலஸ் பூரண் 62 ரன்கள் எடுத்த நிலையில், ரவிபிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து பவெலுடன் கேப்டன் பொல்லார்ட் ஜோடி சேர்ந்தார்.


கடைசியில் 6 பந்தில் 25 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை இளம்வீரர் ஹர்ஷல் படேல் வீசினார். முதல் பந்தில் ரோவ்மென் பாவெல் 1 ரன்னும், இரண்டாவது பந்திலும் 1 ரன்னும் எடுத்தனர். 4 பந்தில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில், மூன்றாவது பந்தில் பாவெல் சிக்ஸரை பறக்கவிட்டார். 4வது பந்தையும் ரோவ்மென் பாவெல் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். 2 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்டது.




இதனால், இந்திய வீரர்களும், ரசிகர்களும் பதற்றத்தின் உச்சிக்கு சென்றனர். ஆனால், ஹர்ஷல் படேலின் 5வது பந்தில் பாவெல் 1 ரன் மட்டுமே எடுத்தார். பின்னரே, இந்திய வீரர்கள் நிம்மதி மூச்சுவிட்டனர்.  கடைசி பந்தில் பொல்லார்ட் 1 ரன் மட்டுமே எடுக்க அந்த அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி டி20 தொடரையும் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணியை மிரளவைத்த ரோவ்மென் பாவெல் 36 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 


புவனேஷ்குமார்,யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்திய அணிக்கு இது 100வது டி20 கிரிக்கெட் வெற்றி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.