கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.




இந்திய தொடக்க வீரர் இஷான்கிஷான் 10 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, விராட்கோலி – ரோகித்சர்மா ஜோடி பொறுப்புடன் ஆடியது. அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்த ரோகித் 18 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்தவேகத்திலே சூர்யகுமார் யாதவ் 6 பந்தில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.


ஆனால், மறுமுனையில் விராட்கோலி களமிறங்கியது முதலே பொறுப்புடன் ஆடினார். அவ்வப்போது ஓரிரு ரன்களை எடுத்த விராட்கோலி, ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் அனுப்பினார். 39 பந்துகளில் அரைசதம் அடித்தார். அரைதசம் அடித்த இரண்டாவது பந்திலே ராஸ்டன் சேஸ் பந்தில் போல்டானார். அவர் 41 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 52 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.




அடுத்து ரிஷப்பண்ட் மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஜோடி 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், இந்திய அணி 15 ஓவ்களில் 124 ரன்களை கடந்தது. கடைசி 5 ஓவர்களில் இருவரும் மிகவும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். இதனால், 16.5 ஓவர்களில் இந்திய அணி 151 ரன்களை எட்டியது.




கடைசி மூன்று ஓவர்களில் ரிஷப் பண்ட்- வெங்கடேஷ் அய்யர் போட்டி போட்டுக்கொண்டு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நொறுக்கினர். ஓவருக்கு இரண்டு பவுண்டரிகளை விளாசியது மட்டுமின்றி, இருவரும் அவ்வப்போது பிரம்மாண்ட சிக்ஸர்களையும் விளாசினர். இதனால், இந்திய அணியின் ரன்ரேட் எகிறியது. கடைசி ஓவரில் வெங்கடேஷ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 18 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.


வெஸ்ட் இண்டீஸ் அணியில் ராஸ்டன் சேஸ் மட்டும் 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.