இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளை விளையாட வெஸ்ட் இண்டீஸுக்கு கடந்த மாதம் சுற்றுபயணம் சென்றது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி, அந்த போட்டியில் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவர் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் அடித்து சாதனை படைத்தார்.


இரண்டாவது டெஸ்ட் போட்டிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 76வது சதத்தை அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இருப்பினும் அந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டதால், மேட்ச் டிராவில் முடிந்தது. இருப்பினும் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.




ஒருநாள் போட்டி


ஜூலை 27 ஆம் தேதி, முதல் ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணி மோதியது. இந்த போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 114 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி 22.5 ஓவரில் வெற்றி பெற்றது.


நேற்று முன்தினம் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்திய அணி முற்றிலும் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை களத்தில் இறக்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 181 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் 91 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறினாலும் 5 விக்கெட்டுக்கு கைகோர்த்த கேப்டன் ஷாய் ஹோப்பும், கேசி கர்டியும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் வெற்றிக்கு அழைத்து சென்றனர். 36.4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.


மூன்று ஆண்டுகால பகை:


2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 தொடர் விளையாட இந்தியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டது. இந்த தொடரை இந்திய ரசிகர்கள் யாராலும் மறக்க இயலாது. ஏன் என்றால் முன்னால் கேப்டன் விராட் கோலி செய்த சம்பவம் அந்த மாதிரி. முதல் டி20 போட்டியில் 207 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது இந்தியா. இந்த போட்டியில் விராட் கோலி தனி ஆளாக நின்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் 94 எடுத்து 18.4 ஓவர்களிலே 209 ரன்களுடன் அணியை வெற்றி பெற செய்தார்.


இதனை தொடர்ந்து நடந்த இரண்டாவது டி 20 போட்டி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. இந்திய ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டிலும் இந்திய சிறப்பாக பந்துவீசி சுலபமாக வென்றுவிடும் என்று எண்ணிருந்த நிலையில் லென்டில் சிம்மன்ஸ், எவின் லூயிஸ் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இருவரின் பார்டனர்ஷிப் 73 ரன்கள்வரை தொடர்ந்தது. இருப்பினும் அடுத்து வந்தவர்களும் சிறப்பாக ஆட 18.3 ஓவர்களிலே வெற்றி  பெற்றது. இதுவே வெஸ்ட் இண்டீஸ் சர்வதேச தொடரில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக வென்ற போட்டியாகும். தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில்தான் வெஸ்ட் இண்டீஸ் வென்றது.