இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 238 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி.
மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. அதனை அடுத்து, இந்திய அணிக்காக ரோஹித் ஷர்மா, பண்ட் ஓப்பனிங் களமிறங்கினர். போட்டியின் மூன்றாவது ஓவரிலேயே ரோஹித் ஷர்மா அவுட்டாக, அவரை அடுத்து ரிஷப் பண்ட் அவுட்டானார். அதே ஓவரில் கோலியும் வெளியேற, 11.6 ஓவர்களுக்கு, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்து இந்திய அணி தடுமாறியது.
அடுத்து களமிறங்கிய கே.எல் ராகுலும், சூர்யகுமார் யாதவும் நிதானமாக பேட்டிங் செய்து ரன் சேர்த்தனர். 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்ற இந்த இணை மெதுவாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராகுல் அரை சதத்தை நெருங்கி அடித்து கொண்டிருந்தபோது, 1 ரன் எடுக்க ஆசைப்பட்டு ரன் - அவுட்டாகினார். இதனால், அரை சதம் மிஸ்ஸானது.
ராகுலை வெளியேறதற்கு பின்பு, சூர்யகுமார் யாதவ் அரை சதம் கடந்து அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா ஆகியோர் தலா 20+ ரன்கள் சேர்க்க, இந்திய அணி 200-ஐ தாண்டியது. டெயில் எண்டர்களாக களமிறங்கிய தாகூர், சிராஜ் அடுத்தடுத்து அவுட்டாக 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 237 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை, அல்சாரி ஜோசஃப், ஒடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கீமர் ரோச், ஜேசன் ஹோல்டர், ஹொசெயின், ஃபேபியன் ஆலன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடரை கைப்பற்றும். அத்துடன் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடர்ச்சியாக 7ஆவது முறையாக இந்திய அணி தொடரை வென்று அசத்தும். கடைசியாக இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரை 4-3 என்ற கணக்கில் வென்றது. அதன்பின்னர் 19 ஆண்டுகளாக நடைபெற்றுள்ள 6 தொடர்களையும் இந்திய அணியே வென்றுள்ளது.