அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் முதல் டெஸ்டில் நேருக்கு நேர் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
விக்கெட்டுகளை இழக்கும் வெஸ்ட் இண்டீஸ்:
கே.எல்.ராகுல், துருவ் ஜுரல், ஜடேஜா ஆகியோரது சதம் விளாசிய நிலையில், இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். ஆ்ட்டத்தை தொடங்கிய ஜான் கேம்ப்பெல் - தகநரேன் சந்தர்பால் ஆகிய இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகாெடுத்தனர். சந்தர்பால் 8 ரன்களுடனும், ஜான் கேம்ப்பெல் 14 ரன்களுடனும் அவுட்டாக அதானசே களமிறங்கினார்.
மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொதப்பலாக ஆடினர். பேட்டிங்கில் அசத்திய ஜடேஜா பந்துவீச்சிலும் அசத்தி வருகிறார். அணியின் நட்சத்திர வீரர் ப்ரண்டன் கிங் 5 ரன்னில் ஜடேஜா சுழலில் அவுட்டாக, கேப்டன் ரோஸ்டன் சேஸ் குல்தீப் யாதவ் சுழலில் போல்டானார். 1 ரன்னில் கேப்டன் சேஸ் அவுட்டாக, அடுத்து வந்த ஷாய் ஹோப் 1 ரன்னில் ஜடேஜா சுழலில் அவுட்டானார்.
5 விக்கெட் மட்டுமே கைவசம்:
10 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து வரும் நிலையில், மதிய உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்களை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்துள்ளது. முன்னணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்து வரும் நிலையில், இளம் வீரர் அதானசே மட்டும் போராடி வருகிறார். அவர் 50 பந்துகளில் 3 பவுண்டரி 27 ரன்களுடனும், கிரீவ்ஸ் 21 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்களுடனும் ஆடி வருகிறார்.
தற்போது 220 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சிய 5 விக்கெட்டுகளை இழந்தால் இன்னிங்ஸ் தோல்வியை அடையும். அந்த அணியின் ஜோமேல் வாரிகன், காரி பியர், ஜோகன் லேய்ன், ஜேய்டன் சீயல்ஸ் ஆகிய வீரர்கள் மட்டுமே உள்ளனர்.
இன்னிங்ஸ் தோல்வியா?
தோல்வியின் பிடியில் சிக்கியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சிய 5 விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு இன்னும் 220 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளதால் விக்கெட்டுகளை காப்பாற்றுவதா? இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிப்பதா? என்ற நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதை எப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்கொள்ளப்போகிறது? என்ற சூழலில், இந்திய அணி எஞ்சிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த போட்டியில் இன்று வெற்றி பெற முயற்சிக்கிறது. பும்ரா, சிராஜ், ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரை வைத்து பந்துவீச்சு தாக்குதலால் வெற்றி பெற சுப்மன்கில் வியூகம் வகுத்து வருகின்றனர்.