IND Vs AUS ODI Squad: ஆஸ்திரேலியா சுற்றுப்பயண ஒருநாள் போட்டி தொடரின் மூலம், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர்:
உள்ளூரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அக்டோபர் 19ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்களின் விவரங்கள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை மற்றும் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடர் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், ஆஸ்திரேலிய தொடரை ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்:
ஆஸ்திரேலிய தொடரை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பதற்கு முக்கிய காரணம், இந்திய அணியின் மிகப்பெரிய தூண்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பவிருப்பதே ஆகும். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றதோடு, டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இருவரும் அறிவித்தனர். அதனை தொடர்ந்து, டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகினர். இதனால், 2027ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பையை மட்டும் கருத்தில் கொண்டு, ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட உள்ளதாக தெரிவித்தனர். அதன்படி, கடந்த பிப்ரவரி - மார்ச் காலகட்டத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றபிறகு எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாமல் இருந்த கோலி மற்றும் ரோகித், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் மூலம் மீண்டும் அணிக்கு திரும்ப உள்ளனர். இதுவே இவர்களின் கடைசி ஆஸ்திரேலிய தொடராகவும் இருக்கலாம் என்பதால், அந்த தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கேப்டன்சியை தொடர்வாரா ரோகித் சர்மா?
மும்பையில் இன்று கூடும் தேர்வுக்குழு கூட்டத்தில், ஆஸ்திரேலிய அணிக்கான வீரர்களை தேர்வு செய்வதோடு, ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியை தொடர்வாரா? என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரம், ரோகித்துடன் தனிப்பட்ட முறையில் இந்த ஆலோசனை நடைபெறக் கூடும். அண்மையில் தான் உடற்தகுதி பரிசோதனையை பெங்களூருவில் அவர் பூர்த்தி செய்தது குறிப்பிடத்தக்கது.
யார் யாருக்கு வாய்ப்பு?
கோலி மற்றும் ரோகித் சர்மாவை தொடர்ந்து, சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை வெல்ல பங்கு வகித்த வீரர்கள் பலரும் அணியில் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதன்படி, அந்த போட்டியில் பட்டாசாய் செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். டி20 தொடருக்கும் அவர் திரும்புவாரா? என்பது மட்டுமே தற்போது கேள்வியாக உள்ளது. வெளிநாட்டு தொடருக்கு 15க்கும் அதிகமான வீரர்களை தேர்வு செய்யலாம் என்பதால், ஜெய்ஷ்வால் அணியில் இடம்பெறலாம். டி20 போட்டிகளில் அசத்தி வரும் அபிஷேக் சர்மாவின் பெயரும் பரிசீலிக்கப்படலாம். காயத்திலிருந்து முழுமையாக மீண்டால், ரிஷப் பண்டின் பெயரும் கட்டாயம் இடம்பெறக்கூடும்.