இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. ரோகித் சர்மா - விராட் கோலி ஓய்வு பெற்ற பிறகு இளம் கிரிக்கெட் வீரர்கள் கொண்ட இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி வருகிறது. பந்துவீச்சில் மட்டும் பும்ரா, சிராஜ் அனுபவ வீரர்கள் ஆடி வருகின்றனர். 

புஜாரா இடத்தில் சாய் சுதர்சன்:

ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லாத நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு பிரகாசமாக கிடைத்துள்ளது. இங்கிலாந்து தொடரில் சாய் சுதர்சன், கருண் நாயருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பை வீணடித்த கருண் நாயர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

புஜாரா இடத்தில் களமிறக்கப்படும் சாய் சுதர்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை இங்கிலாந்து தொடரில் பயன்படுத்த தவறிய நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டார். நேற்று முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சொதப்போ சொதப்பல்:

இதையடுத்த, களமிறங்கிய இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் 36 ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக ஆடி வரும் சாய் சுதர்சனுக்கு போட்டி நடக்கும் அகமதாபாத் மைதானம் மிகுந்த அனுபவம் நிறைந்த மைதானம் ஆகும். 

முந்தைய வெஸ்ட் இண்டீஸ் அணி போல அனுபவம் மிகுந்த பந்துவீச்சாளர்களை கொண்ட அணியும் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி இல்லை. அந்த அணியின் கேப்டன் சேஸ் சுழலில் சிக்கி எல்பிடபுள்யு ஆனார். 19 பந்துகளில் 7 ரன்களில் சுதர்சன் அவுட்டாகி ஏமாற்றம் தந்தார். இந்திய அணியுடன் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்து, ஒரு முறை கூட களமிறக்கப்படாமலே அபிமன்யு ஈஸ்வரன் போன்ற வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். 

கேள்விக்குறியாகும் இடம்:

இந்த சூழலில், கிடைத்த வாய்ப்பை சாய் சுதர்சன் இவ்வாறு வீணடித்து வருவது அணிக்கும், அவரது டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்திற்கும் ஆரோக்கியமற்றதாகவே பார்க்கப்படுகிறது. 23 வயதான சாய் சுதர்சன் இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 140 ரன்கள் எடுத்துள்ளார். அதாவது, 6 இன்னிங்சில் ஆடியுள்ளார். அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு இன்னிங்ஸ் தவிர எஞ்சிய போட்டிகளில் சொதப்பினார். இங்கிலாந்திற்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் 0, 30, 61, 0, 38 மற்றும் 11 ஆகிய ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார்.

சாய் சுதர்சனுக்கு நீண்ட எதிர்காலம் உள்ள நிலையில் அவர் இவ்வாறு தொடர்ந்து தடுமாறி வந்தால் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகும் என்பதே உண்மை. இதனால், அடுத்த இன்னிங்ஸ் உள்பட இனி வரும் போட்டிகளில் சாய் சுதர்சன் தனது திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். 

இந்தியா அசத்துமா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் இதுவரை 40 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 1793 ரன்களை குவித்துள்ளார். அதில் 12 அரைசதம், 2 சதம் அடங்கும். உள்ளூர் போட்டிகளிலும் அசத்தலாக ஆடியதன் எதிரொலியாகவே அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிட்டியது. தற்போது இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் - சுப்மன்கில் களத்தில் உள்ளனர். ராகுல் 53 ரன்களுடனும், கில் 18 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்திய அணி 41 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்றைய போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா? வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு ஓங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.