IND Vs WI 1st : இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

Continues below advertisement

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடர்:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். கில் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக உள்ளூர் டெஸ்ட் தொடரில் களமிறங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கோட்டையை மீட்குமா இந்தியா?

உள்ளூர் டெஸ்ட் தொடர்கள் என்றாலே இந்தியா தான் ஆதிக்கம் செலுத்தும் என்ற வரலாற்றை, கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து தொடர் மாற்றியது. 2013ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக உள்ளூரில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தது. 3-0 என பெற்ற தோல்வி இந்திய அணியில் பெரும் மாற்றத்தையே கொண்டு வந்துள்ளது. அதன் விளைவாகவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோலி, ரோகித் மற்றும் அஷ்வின் ஆகியோரில் ஒருவர் கூட இல்லாத, ஒரு டெஸ்ட் தொடரை இந்திய அணி உள்ளூரில் விளையாட உள்ளது. இதனால், இழந்த கோட்டையை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் மூலம், இந்திய அணி மீண்டும் மீட்டெடுக்குமா? என்பதை ரசிகர்கள் உற்று நோக்குகின்றனர். அதேநேரம், நட்சத்திர வீரர்களுக்கு காயம் மற்றும் அண்மையில் நேபாளம் அணிக்குஇ எதிராக டி20 தொடரை இழந்தது போன்ற மோசமான சூழலில் இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்காது என்றும் கருதப்படுகிறது.

நட்சத்திரங்கள் இல்லாத இந்தியா

நட்சத்திர வீரர்களை அணிவகுத்து நிற்கக் கூடிய இந்திய அணி, தற்போது இளம் வீரர்களால் நிரப்பபப்ட்டுள்ளது. 2010ம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக அஷ்வின் இல்லாமல், உள்ளூரில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. இதனால் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஜடேஜாவிற்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. ரோகித்தின் இடத்தை கே.எல். ராகுலும், கோலியின் இடத்தை கேப்டன் கில்லும் நிரப்ப தயாராகி வருகின்றனர். பந்துவீச்சு யூனிட் பும்ரா தலைமையில் வலுவாக இருப்பதால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்த தொடர் சவாலாக இருக்கக் கூடும். இங்கிலாந்து தொடரை கைப்பற்றாவிட்டாலும், 2-2 என சமன்படுத்தியது இந்திய அணிக்கு நல்ல உத்வேகமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அகமதாபாத் மைதானம் எப்படி?

இந்தியா இந்தப் புதிய ஹோம் சீசனை வழக்கத்திற்கு மாறாக க்ரீன் பிட்ச்சில் தொடங்குகிறது, அதில் 4-5 மிமீ புல் இருக்கும். போட்டியின் காலையில் அது எவ்வளவு ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்பதைப் பொறுத்து தேர்வுகள் மற்றும் டாஸ் முடிவுகள் இருக்கலாம். போட்டியின் போது லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

கவனிக்க வேண்டிய புள்ளி விவரங்கள்:

  • 1994ம் ஆண்டு மொஹாலியில் நடந்த டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணி 243 ரன்கள் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடிய 10 போட்டிகளில், இரண்டில் ட்ரா செய்துள்ளது. மற்ற 8 போட்டிகளிலும் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியையே சந்தித்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம் பெற்றிருந்த ரோஸ்டன் சேஸ், ஷாய் ஹோப் மற்றும் ஜோமல் வாரிக்கன் மட்டுமே மீண்டும் இந்த முறை விளையாட உள்ளனர்.
  • டெஸ்ட் வரலாற்றில் 4000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரர் என்ற சாதனையை அடைய ரவீந்திர ஜடேஜாவிற்கு இன்னும் 114 ரன்கள் மட்டுமே தேவை. இயன் போத்தம், கபில் தேவ் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்த பட்டியலில் உள்ள ஆல்-ரவுண்டர்களாவர்
  • ஜான் கேம்பல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை எட்ட ஆறு ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது

உத்தேச பிளேயிங் லெவன் விவரங்கள்:

இந்தியா:  யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி/அக்சர் படேல்/தேவ்தத் படிக்கல்,  ரவீந்திர ஜடேஜா,  வாஷிங்டன்சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

மேற்கிந்திய தீவுகள்: டேகனரைன் சந்தர்பால், கெவ்லான் ஆண்டர்சன், அலிக் அதனேஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், காரி பியர்,  ஜோமல் வாரிக்கன்,  ஆண்டர்சன் பிலிப்/ஜோஹான் லேன், ஜெய்டன் சீல்ஸ்