பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி பிசிசிஐயிடம் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அதை மறுத்துள்ளார்.

Continues below advertisement


கோப்பையை வாங்க மறுத்த இந்திய அணி:


ஆசிய கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி பட்டத்தை வென்றது. ஆனால், வெற்றிக்கொண்டாட்டத்தின் போது இந்திய அணி கோப்பையை வாங்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்றால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமை பொறுப்பில் இருக்கும் மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், அந்த  நாட்டு அமைச்சராகவும் செயலபட்டு வருகிறார். இதனால் இவரது கையால் கோப்பையை வாங்க இந்திய அணி திட்டவட்டமாக அறிவித்து விட்டது.


அதற்கு பதிலாக வேறு யாராவது கோப்பையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வேறு யாரை வைத்தும் கோப்பையை வழங்க முடியாது என்று அறிவித்தது. அதேபோல், நக்வி இந்திய வீரர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை வழங்க மறுத்து, கோப்பையை மைதானத்திலிருந்து எடுத்துச் செல்லுமாறு ஏ.சி.சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


இதனிடையே, நவம்பரில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மாநாட்டின் போது, ​​நக்விக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று தேவஜித் சைகியா கூறியிருந்தார். இச்சூழலில் தான் நக்வி பிசிசிஐ-யிடம் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியானது.


மன்னிப்பு கேட்டேனா?


இந்த நிலையில் தான் தான் மன்னிப்பே கேட்கவில்லை என்று மொஹ்சின் நக்வி  விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “”நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, பிசிசிஐயிடம் நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கவில்லை, ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டேன்.


இந்த ஜோடிக்கப்பட்ட முட்டாள்தனம் மலிவான பிரச்சாரமே தவிர வேறில்லை, இது அவர்களின் சொந்த மக்களை தவறாக வழிநடத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.


துரதிர்ஷ்டவசமாக, இந்தியா தொடர்ந்து அரசியலை கிரிக்கெட்டில் இழுத்து, விளையாட்டின் உணர்வையே சேதப்படுத்துகிறது.ஏ.சி.சி தலைவராக, நான் அன்றே கோப்பையை ஒப்படைக்கத் தயாராக இருந்தேன், இப்போதும் தயாராக இருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே விரும்பினால், ஏ.சி.சி அலுவலகத்திற்கு வந்து என்னிடமிருந்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.