குஜராத் மாநிலத்தின் அகமாதாபாத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் மேற்கிந்திய தீவு வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அந்த அணி 43.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சாஹல் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.




இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் நிகோலஸ் பூரணை 18 ரன்களில் எல்.பி.டபுள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். ஒருநாள் போட்டியில் யுஸ்வேந்திர சாஹலின் 100வது விக்கெட் இதுவாகும். முதலில் கள நடுவர் நாட் அவுட் என்றார். பின்னர், விராட்கோலி அறிவுறுத்தலின் பேரில் ரோகித் சர்மா டி.ஆர்.எஸ். கேட்க டி.வி. ரீப்ளேயில் அவுட் என்று தெரியவந்தது. இதையடுத்து, 25 பந்தில் 3 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்திருந்த நிகோலஸ் பூரண் பெவிலியனுக்கு சென்றார்.




மேலும், இந்த போட்டியில் ஷாம்ரா ப்ரூக்ஸ் 12 ரன்களிலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் கேப்டன் பொல்லார்ட் 0 ரன்கள், அல்ஜாரி ஜோசப் 13 ரன்களிலும் சாஹல் பந்தில் ஆட்டமிழந்தனர். குறிப்பாக, பொல்லார்ட் இந்த போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலே சாஹல் சுழலில் போல்டாகி வெளியேறினார். இந்த போட்டியில் சாஹல் 4.5 ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.


31 வயதான சாஹல் இதுவரை 60 ஒருநாள் போட்டிகளில் ஆடி 103 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 42 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சாகும். மேலும், 50 டி20 போட்டிகளில் ஆடி 64 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிலும் 25 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பறியதை தனது சிறந்த பந்துவீச்சாக வைத்துள்ளார். பெங்களூர் அணியின் ஆஸ்தான பந்துவீச்சாளரான சாஹல் 114 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 139 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 




2016ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக ஆடி வரும் யுஸ்வேந்திர சாஹல் இதுவரை ஒரு முறை இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டி கூட ஆடியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டியிலே களமிறங்காமல் ஒருநாள் போட்டியில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.