இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்காக இலங்கை அணி விரைவில் இந்தியா வர இருக்கிறது.
இலங்கை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இரண்டு டி20 போட்டிக்கொண்ட தொடரில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
இலங்கை தொடருக்கான டெஸ்ட் அணியில் புஜாரா,ரஹானே, சாஹா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இடம்பெறவில்லை.
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா, மாயங்க் அகர்வால், பிரியங்க் பன்சல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பண்ட், கே.எஸ்.பாரத், அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்
இந்தநிலையில், இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான அணி நிர்வாகம் தன்னிடம் 'ஓய்வு' பற்றி யோசிக்கச் சொன்னதாக பகிரங்க கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட கருத்தில், இனிமேல் இந்திய அணியில் நான் அங்கம் வகிக்கமாட்டேன் என்றும், பரிசீலிக்கப்படமாட்டேன் என்று அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதேபோல், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட ஓய்வு பெறுவது பற்றி யோசிக்குமாறு பரிந்துரைத்தார்.
கங்குலி குறித்து விருத்திமான் சாஹா :
கடந்த நவம்பரில் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் நான் ஆட்டமிழக்காமல் 61 ரன்களை எடுத்தபோது, தாதா(கங்குலி) என்னை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, அவர் பிசிசிஐயின் தலைவராக இருக்கும் வரை இந்திய அணியில் எனது இடம் குறித்து கவலை பட வேண்டாம் என்றார்.
இது எனக்கு அப்போது மிகப்பெரிய நம்பிக்கையை அளித்தது. ஆனால், தாதா தெரிவித்து சில மாதங்களிலேயே இது எல்லாம் முழுமையாக மாறிவிட்டது என்று குற்றசாட்டியுள்ளார்.
போட்டி விவரம் :
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 24ஆம் தேதி லக்னோவில் நடைபெறுகிறது. இரண்டாவது டி20 போட்டி 26ஆம் தேதியும், மூன்றாவது டி20 போட்டி 27ஆம் தேதியும் தர்மசாலவிலும் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக மார்ச் 12ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்