இந்தியாவில் மிகவும் பழமையான உள்ளூர் போட்டி தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை தொடர். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ரஞ்சிக் கோப்பை தொடர் நடைபெறவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ரஞ்சிக் கோப்பை தொடர் தொடங்கியுள்ளது. 


 


இந்நிலையில் தமிழ்நாடு அணி டெல்லியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்தப் போட்டி அசாமில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி  452 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணி 162 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது. 


 






அப்போது ஜோடி சேர்ந்த ஷாரூக் கான் மற்றும் பாபா இந்தர்ஜீத் ஆகியோர் சரிவில் இருந்து தமிழ்நாடு அணியை மீட்டனர். இருவரும் 6ஆவது விக்கெட்டிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய பாபா இந்தர்ஜீத் 117 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் வந்த ஜெகதீசன் உடன் சேர்ந்து ஷாரூக் கான் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் ஷாரூக் கான் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். 


 


கடைசியாக ஷாரூக் கான் 20 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் விளாசி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்காரணமாக தமிழ்நாடு அணி டெல்லி அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை தாண்டியது. அத்துடன் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 494 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டெல்லி அணியைவிட 42 ரன்கள் தமிழ்நாடு அணி முன்னிலை பெற்றது. 


 






மேலும் ரஞ்சிக் கோப்பை வரலாற்றில்  முதல் முறையாக 400 ரன்களுக்கு மேல் எதிரணி அடித்த பிறகு அதை தமிழ்நாடு அணி கடந்துள்ளது. இதற்கு முன்பாக 2002ஆம் ஆண்டு பரோடா அணி அடித்திருந்த 381 ரன்களை தமிழ்நாடு அணி கடந்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அதை தமிழ்நாடு அணி தற்போது முறியடித்துள்ளது. 




மேலும் படிக்க: இலங்கை டி20 தொடரில் கோலிக்கு ஓய்வு! இந்திய டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா - வெளியான அறிவிப்பு!!