இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று  அசத்தியுள்ளது. நேற்ற நடந்த கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவருக்கு சென்ற இந்த போட்டியில் இந்திய அணி வாஷிங்டன் சுந்தரின் அபார பந்துவீச்சால் வெற்றி பெற்றது.


வாய்ப்பை வீணடித்த சாம்சன்:


விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக, முறையாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டு வந்த சஞ்சு சாம்சனுக்கு டி20 தொடரில் மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது.


கடைசியாக நடந்த 2 போட்டிகளிலும் சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இரண்டு போட்டிகளிலும் டக் அவுட்டாகி அவர் ஏமாற்றமே அளித்தார். சாம்சனுக்கு முறையாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், அவருக்கு அவ்வாறு வாய்ப்பு வழங்கப்பட்டாலும் ஆடும் லெவனில் முறையாக பேட்டிங் ஆர்டர் வழங்கப்படவில்லை என்றும் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.


ரசிகர்கள் ஏமாற்றம்:


ஆனால், இந்த தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், முறையாக களமிறக்கவில்லை என்றும் கூறவே முடியாது. ஏனென்றால் 2வது டி20 போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். நேற்றைய போட்டியில் ஒன் டவுன் வீரராக களமிறக்கப்பட்டார். கிடைத்த இரண்டு பொன்னான வாய்ப்புகளையும் கோட்டை விட்ட சாம்சன் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார்.


சாம்சன் இதுவரை சர்வதேச அளவில் இந்திய அணிக்காக மொத்தம் 30 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் 2 அரைசதத்துடன் 444 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி ஒரு சதம் மற்றும் 3 அரைசதத்துடன் 510 ரன்கள் எடுத்துள்ளார். ஐ.பி.எல். தொடரில் 167 `போட்டிகளில் ஆடி 3 சதம், 25 அரைசதத்துடன் 4 ஆயிரத்து 419 ரன்கள் எடுத்துள்ளார்.


இளம் வீரர்கள் போட்டி:


இந்திய அணியில் இடம்பிடிக்க இளம் வீரர்கள் பலருக்கும் இடையே போட்டி நிலவி வரும் சூழலில், கிடைத்த வாய்ப்பை சாம்சன் இவ்வாறு வீணடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ருதுராஜ், ரியான்பராக், ரிங்குசிங், அபிஷேக் சர்மா, ஷிவம்துபே, ஜெய்ஸ்வால் என தொடர்ந்து பலரும் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்க போராடி வரும் சூழலில், அரிதாக கிடைக்கும் வாய்ப்பை சாம்சன் தவறவிட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.