இந்தியா - இலங்கை டி20:
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி விளையாடி முடித்துள்ளது. அந்தவகையில், இன்று (ஜூலை30) கடைசி டி20 போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் களம் இறங்கினார்கள். இதில் ஜெய்ஸ்வால் 9 பந்துகள் மட்டுமே களத்தில் நின்று 10 ரன்களுடன் நடையைக்கட்டினார்.அடுத்து வந்த சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி வெளியேற ரிங்கு சிங் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
14 ரன்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. இதனிடையே ஓரளவிற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சுப்மன் கில். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க சுப்மன்கில்லும் 39 ரன்களில் அவுட் ஆனார். அதே நேரம் ரியான் பராக்கும், வாசிங்டன் சுந்தரும் ஓரளவிற்கு ரன்களை சேர்த்துக்கொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி வெற்றி:
138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது இலங்கை அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷாங்கா மற்றும் குசல் மெண்டிஸ் களம் இறங்கினார்கள். இருவரும் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதில் 26 ரன்களில் நிஷாங்கா விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த குசல் பெரேரா அதிரடியாக ஆடினார். இதனிடையே குசல் மெண்டிஸ் 43 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். வன்னிது கசரங்கா 3 ரன்னிலும், சாரித் அசரங்கா டக் அவுட் ஆகி வெளியேறினார்கள்.
அடுத்து களம் இறங்கிய வீரர்களும் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுக்க இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டிரா ஆனதால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றது. அந்த வகையில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.