பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி நிர்ணயித்துள்ள 447 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் கேப்டன் கருணரத்னே மட்டும் நிலைத்து நின்று சதமடித்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறார்.


இந்த நிலையில், மூன்றாவது நாளான இன்று இந்திய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் தனது சுழற்பந்துவீச்சு மூலம் சிறப்பாக ஆடி வந்த குசல் மெண்டிசை அவுட்டாக்கினார். மேலும், தனஞ்செய டி சில்வாவையும் அவுட்டாக்கினார். இதன்மூலம், அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.








இந்த விக்கெட்டுகள் மூலம் அஸ்வின் 86 டெஸ்டுகளில் ஆடி எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை 440 ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு, 93 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 439 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த டேல் ஸ்டெயினின் சாதனையை இதன்மூலம் அஸ்வின் முறியடித்தார். அஸ்வின் ஏற்கனவே கடந்த டெஸ்டில் இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவின் 432 விக்கெட்டுகள் சாதனையை முறியடித்தார். தற்போது டேல் ஸ்டெயினின் சாதனையையும் முறியடித்துள்ளார்.  


அஸ்வின் 86 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 440 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி 59 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு டெஸ்டில் 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் 151 விக்கெட்டுகளையும், டி20 யில் 61 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.




தற்போது கிரிக்கெட் ஆடும் வீரர்களிலே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இதுவரை டெஸ்ட் போட்டிகளிலே அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இலங்கையின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். வார்னே 708 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆண்டர்சன் 640 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 4வது இடத்திலும், மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் 5வது இடத்திலும், ஸ்டூவர்ட் பிராட் 537 விக்கெட்டுகளுடன் 6வது இடத்திலும், வால்ஷ் 519 விக்கெட்டுடன் 7வது இடத்திலும் உள்ளனர்.


இந்திய பந்துவீச்சாளர்களில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் அஸ்வின் உள்ளார். ஒட்டுமொத்தமாக அஸ்வின் டெஸ்டில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண