இந்தியா கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நாளை மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின்பு இந்திய அணி இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் அந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சில அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு ஆங்கில தளம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் புஜாரா, ரஹானே,இஷாந்த் சர்மா மற்றும் சாஹா ஆகிய நான்கு பேரையும் இந்திய அணியில் எடுப்பது வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் புஜாரா,ரஹானே ஆகிய இருவரும் கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடவில்லை. இதனால் அவர்கள் இருவரும் மீண்டும் ரஞ்சி கோப்பையில் விளையாடி தங்களுடைய ஃபார்மை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் அணியில் இடம் கிடைக்கும் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக தற்போது ரஹானே மும்பை அணியிலும், புஜாரா சவுராஸ்டிரா அணியிலும் இடம்பெற்றுள்ளனர். ஆகவே அதில் அவர்கள் மீண்டும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது.
சாஹா மற்றும் இஷாந்த் சர்மவை பொறுத்தவரை அவர்கள் இருவரையும் தாண்டி மற்ற வீரர்களை அணி நிர்வாகம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் வயது அதிகமாக உள்ளதால் அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி ரிஷப் பண்ட்டிற்கு துணையாக மாற்று விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் இனிமேல் அணியில் இடம்பிடிப்பார் என்று கூறப்படுகிறது. அதேபோல் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக சிராஜ், ஷர்துல் தாகூர் உள்ளிட்டவர்களுக்கு அணியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்5ஆம் தேதி மொஹாலியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா...!