மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று அகமாதாபாத்தில் நடைபெற்று இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அவர்கள் பந்துவீச்சுக்கு தேர்வு செய்ததற்கு ஏதுவாக கேப்டன் ரோகித்சர்மா 5 ரன்களில் ரோச் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பிறகு ஜோடி சேர்ந்த முன்னாள் கேப்டன் விராட்கோலியும், ரிஷப் பண்டும் நிதானமாக ஆடினர். ஆனாலும், ரிஷப் பண்ட் 18 ரன்களிலும், விராட்கோலி 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுலும், சூர்யகுமாரும் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.




அணியின் ஸ்கோர் 134 ரன்களாக இருந்தபோது 49 ரன்கள் எடுத்திருந்த கே.எல்.ராகுல் 49 ரன்களில் ரன் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த பிறகு, பொறுப்புடன் ஆடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். பின்னர், அவரும் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 24 ரன்கள், தீபக் ஹூடா 29 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது.


அடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் ஷாய் ஹோப்பும், பிரண்டன் கிங்கும் நிதானமான தொடக்கத்தை அளித்தனர், ஆனால், அணியின் ஸ்கோர் 32 ரன்களை எட்டியபோது பிரண்டன் கிங் 18 ரன்களில் பிரசித்கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் டேரன் ப்ராவோவும் 1 ரன்னில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.




ஓரளவு நிலைத்து நின்று ஆடிய ஷாய்ஹோப் 54 பந்தில் 27 ரன்கள் எடுத்து சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் நிகோலஸ் பூரண் 9 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேசன் ஹோல்டரும் 2 ரன்னில் வெளியேற 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை அந்த அணி இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த ஷாம்ரா ப்ரூக்ஸ் மற்றும் அகெய்ல் ஹொசைன் சற்றுநேரம் நிலைத்து நின்றனர்.


நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிய ப்ரூக்ஸ் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் தீபக்ஹூடா பந்தில் ஆட்டமிழந்தார். ஹொசைனும் 34 ரன்களில் தாக்கூர் பந்தில் ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் ஒடின் ஸ்மித் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 46 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.




இந்த தொடரை வென்றதன் மூலமாக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக பெறும் 7வது தொடர் வெற்றி ஆகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண