இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஏற்கனவே ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணி 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. 


இந்தநிலையில், இரு அணிகளும் மோதும் 3 ஒருநாள் கொண்ட போட்டி நாளை தொடங்குகிறது. டி20 தொடர் ஓய்வுக்கு பிரகு இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இதனால் ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு ஆடும் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி எழுக்கிறது. இதனால் இந்திய அணியை தேர்வு செய்வது கேப்டன் ரோகித் சர்மா மிகப்பெரிய சவாலாக இருக்கும். 


இந்தியா - இலங்கை மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 10)  கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 


ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மாவுக்கு உள்ள சவால்கள்:



  • ஷ்ரேயாஸ் ஐயரா அல்லது சூர்யகுமார் யாதவா

  • மீண்டும் அணியில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி

  • ரோகித்துடன் ஓப்பன் செய்வது யார்? 



சுப்மான் கில் அல்லது இஷான் கிஷன்: 


ரோகித் சர்மாவுடன் ஓப்பன் செய்வது யார் என்ற கேள்வி தவான் இல்லாததால் எழுகிறது. வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அதே நேரத்தில் சுப்மன் கில் கடந்த 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சராசரியாக 55க்கு மேல் வைத்துள்ளார். சுப்மன் கில், ரோகித் சர்மா இல்லாத நேரத்தில் அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்தி கொண்டார். இஷான் இரட்டை சதம் அடித்திருந்தாலும், ரன் குவிப்பு என்று வரும்போது கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால், ரோகித் சர்மா தன்னுடன் இடது கை தொடக்க வீரரை விரும்பினால், இஷான் கிஷனுக்கே முக்கியத்துவம் தருவார். 


4வது இடம் யாருக்கு..? 


இந்திய ஒருநாள் அணியில் 4வது இடம் அதிக முக்கியத்துவம் தரப்படும். சமீப காலங்களில் இந்திய அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஒருபுறம், சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் அரைசதம் மற்றும் சதத்தினை பறக்கவிட, 2023 ல் இன்னும் விளையாராத ஷ்ரேயாஸ் ஐயர், 2022 ல் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இதனால் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற குழப்பம் நிலவும்.


பந்துவீச்சு:


முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் அணிக்கு வந்துள்ளனர்.அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் அந்த இடத்திற்காக சீனியர்களுடன் மோத இருக்கின்றனர். அதேபோல், சுழற்பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு என்பது ரோகித்தின் விருப்பம் மட்டுமே. 


ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு முதல் முறையாக இணைந்து விளையாட உள்ளனர். உம்ரான் மாலிக், முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் மீதமுள்ள ஒரு இடத்திற்காக போராடுவர். 


இலங்கை ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல். , குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.