விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இந்திய வீரர் ரிஷப் பண்டிற்கு நடப்பாண்டுக்கான ஒப்பந்த தொகை முழுமையாக வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. 


விபத்தில் சிக்கிய பண்ட் 


கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இந்த விபத்தானது உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில் நிகழ்ந்தது. தனது தாயை சர்ப்பிரைஸ் ஆக பார்க்க சென்ற போது இந்த விபத்து நடைபெற்றது.  இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக விபத்தில் சிக்கிய ரிஷப்பை மீட்டு டேராடூன் மேக்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.






பண்டிற்கு மூளை மற்றும் தண்டு வடத்தில் எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், நெற்றியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. மேலும் கை மற்றும் காலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சில தினங்களுக்கு முன் மேல்சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்பட்டார். 


மும்பையின் அந்தேரி மேற்கில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவ மையத்தின் தலைவரும் ஆர்த்ரோஸ்கோபி மற்றும் தோள்பட்டை சேவையின் இயக்குநருமான டாக்டர் டின்ஷா பர்திவாலாவால் தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி பண்டிற்கு வலது முழங்காலில் தசைநார் கிழிவு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. 


6 மாதங்களுக்கு ஓய்வு 


அடுத்த 6 மாதங்களுக்கு முழு ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையிலும் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ரிஷப் பண்ட் உடல்நிலையை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவரது அனைத்து சிகிச்சை செலவுகளையும் பிசிசிஐ ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஐபிஎல் தொடர் மூலம் ரிஷப் பண்டிற்கு கிடைக்கக்கூடிய ரூ.16 கோடி சம்பளம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலம் கிடைக்கக்கூடிய ஒப்பந்த தொகையான ரூ.5 கோடி ஆகியவற்றையும் முழுமையாக அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் கிரிக்கெட் விளையாடா விட்டாலும் ரிஷப் பண்ட் தனது ஆண்டு சம்பள தொகையை முழுமையாக பெறுவார். 


பிசிசிஐயின் விதிமுறைகளின்படி காயம் காரணமாக ஒப்பந்த வீரர்கள் ஐபிஎல் தொடரை இழக்கும் பட்சத்தில் வாரியத்தால் முழு ஊதியம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.