துபாயில் உள்ள மைதானத்தில் இன்று சூப்பர் 4 சுற்றில் முக்கியமான ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணியினர் முதலில் பேட்டிங்கில் தடுமாறினர்.
அதிரடியான ஆட்டத்தை தொடங்க முயற்சித்த கே.எல்.ராகுல் 6 ரன்களில் தீக்ஷனாவின் சுழலில் சிக்கினார். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட்கோலி களமிறங்கினார், கடந்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் விளாசிய கோலி, இந்த போட்டியிலும் அசத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மைதானத்தில் பந்துகள் மிகவும் நின்று வந்த நிலையில், மதுஷனகா வேகத்தில் விராட்கோலி போல்டாகினார். விராட்கோலி போல்டானாதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, சூர்யகுமார் யாதவுடன் ஜோடி சேர்ந்த ரோகித்சர்மா அதிரடிக்கு மாறினார். ரோகித் பவுண்டரி, சிக்ஸர் என விளாசியதால் இந்திய அணி பவர்ப்ளேவில் 44 ரன்களை எடுத்தது. இதையடுத்து, அதிரடியாக ஆடினால்தான் இமாலய ஸ்கோரை குவிக்க முடியும் என்று முடிவெடுத்த ரோகித்சர்மா அதிரடிக்கு மாறினார், அவருக்கு சூர்யகுமார் யாதவ் ஒத்துழைப்பு அளித்தார். இதனால், இந்தியா 10 ஓவர்களில் 79 ரன்களை எடுத்தது.
பேட்டிங்கில் மிரட்டிய கேப்டன் ரோகித்சர்மா அரைசதம் அடித்தார். அரைசதம் கடந்த பிறகு ஹசரங்கா வீசிய ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்டார். ரோகித்சர்மா அதிரடியால் இந்தியாவின் ஸ்கோர் 12 ஓவர்களில் 109 ரன்களைத் தொட்டது. அதிரடியாக ஆடிய ரோகித்சர்மா இலங்கையின் கருணரத்னே பந்துவீச்சில் 41 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்ஸருடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் – ஹர்திக்பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் இலங்கை கேப்டன் சனகா வீசிய பந்தில் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 15 ஓவர்களில் 127 ரன்களை விளாசியது. இமாலய ஸ்கோரை குவிக்க வேண்டும் என்பதால் ஹர்திக் பாண்ட்யா அதிரடிக்கு மாறினார். ஆனால், அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். பந்துவீச இலங்கை அணி நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதால், கடைசி இரு ஓவர்களில் ஒரு வீரரை யார்டு வட்டத்திற்குள் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இருப்பினும், மதுஷனகா வீசிய பந்தில் ஹூடா போல்டானார்.
கடைசி ஓவரிலும் புவனேஷ்வர்குமார் டக் அவுட்டாகினார். ஆனாலும், கடைசி ஓவரில் அஸ்வின் ஒரு சிக்ஸர் அடித்ததால் இந்திய அணி 170 ரன்களை கடந்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. இலங்கை அணியில் மதுஷனகா சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கருணரத்னே, கேப்டன் சனகா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அஸ்வின் 7 பந்துகளில் 1 சிக்ஸருடன் 15 ரன்களுடனும், அர்ஷ்தீப்சிங் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.