இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இலங்கை 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி, 137 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. 


தற்போது, இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜனவரி 10ம் தேதி நடைபெற இருக்கிறது. 


நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றி நாயகனாக திகழ்ந்தவர் சூர்யகுமார் யாதவ். நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் (9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்) 112 ரன்கள் குவித்து அசத்தினார். டி20 பார்மேட்டில் சூர்யகுமார் யாதவுக்கு இது மூன்றாவது சர்வதேச சதமாகும். 






சூர்யகுமார் யாதவின் சதங்கள்:


சர்வதேச டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் முதல் சதம் கடந்த ஆண்டு ஜீலை மாதம் இங்கிலாந்து எதிராக அரங்கேறியது. இங்கிலாந்து எதிராக அன்றைய போட்டியில் சூர்யகுமார் யாதவ் 111 ரன்கள் குவித்து அசத்தினார். தொடர்ந்து, கடந்த நவம்பர் 2022 ம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்துக்கு எதிராக 111 ரன்கள் குவித்தார். இந்த இரண்டு சதங்களையும் சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்திலும், நியூசிலாந்திலும் நிகழ்த்தினார். தற்போது தனது 3வது சதத்தை இந்தியாவில் அடித்துள்ளார்.


மேக்ஸ்வெல் சாதனை சமன்:


சூர்யகுமார் யாதவ் இலங்கைக்கு எதிராக சதம் அடித்து தொடர் சாதனை படைத்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த ஐந்து பேட்ஸ்மேன்களில் சூர்யாவும் ஒருவர். ரோகித் சர்மா நான்கு சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (3), கிளென் மேக்ஸ்வெல் (3), காலின் முன்ரோ (3), சபாவூன் த்விஜி (3) ஆகியோர் தலா மூன்று சதங்கள் அடித்துள்ளனர். 


மேலும், ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல்லுக்குப் பிறகு மூன்று வெவ்வேறு நாடுகளில் டி20 சர்வதேச சதங்கள் அடித்த உலகின் இரண்டாவது பேட்ஸ்மேன் சூர்யகுமார் ஆவார். 


இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் சூர்யகுமார் ஆவார். இதற்கு முன் ரோஹித் சர்மா இந்த சாதனையை செய்திருந்தார். 2017-ம் ஆண்டு இந்தூரில் ரோஹித் 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் சதம் அடித்தார். இது டி20 சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரர்களின் இரண்டாவது அதிவேக பேட்ஸ்மேன் ஆகும். இந்த விஷயத்தில் கேப்டன் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்தார். 


இந்தியாவுக்காக வேகமான டி20 சதம்:



  • 35 பந்துகளில் ரோஹித் சர்மா vs இலங்கை (2017)

  • 45 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் vs இலங்கை (2023)

  • 46 பந்துகள் கேஎல் ராகுல் vs வெஸ்ட் இண்டீஸ் (2016)

  • 48 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் vs இங்கிலாந்து (2022)

  • 49 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் vs நியூசிலாந்து (2022)


சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள்:



  • 4 ரோஹித் சர்மா (இந்தியா)

  • 3 சூர்யகுமார் யாதவ் (இந்தியா)

  • 3 கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)

  • 3 கொலின் முன்ரோ (நியூசிலாந்து)

  • 3 சபாவூன் த்விஜி (செக் குடியரசு) 


2022 ம் ஆண்டில், சூர்யகுமார் யாதவ் மொத்தம் 31 சர்வதேச டி20 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்கள் உட்பட 1164 ரன்கள் எடுத்தார். ஒரு காலண்டர் ஆண்டில் டி20 சர்வதேச போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன் 1000 ரன்களை எடுத்தது இதுவே முதல் முறை.