இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த, டி-20 தொடரில் இந்திய அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய அணி களம் கண்டு வருகிறது.


மும்பையில் நடைபெற்ற தொடரின் முதல் டி20-போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தொடரை வெல்லப் போவது யார் என்பதை உறுதி செய்யும் 3-வது கடைசி டி-20 இன்று நடைபெற்று வருகிறது. 


கலக்கல் தொடக்கம்:


ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், சுப்மான் கில் களமிறங்கினர். 


தில்ஷான் மதுஷங்க வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் 1 ரன்னில் அவுட்டாக, மறுமுனையில் களமிறங்கிய திரிபாதி கலக்க தொடங்கினார். கருணாரத்னே வீசிய 6 வது ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட திரிபாதி (35 ரன்கள், 16 பந்துகள்) அதே ஓவரில் தில்ஷான் மதுஷங்கவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 


சூர்யகுமார் யாதவ் மிரட்டல்:


அடுத்ததாக சுப்மான் கில்லுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கினார். இதையடுத்து, இந்திய அணி 10.4 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. 


அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்த பந்துகளை சிக்ஸர்களை பறக்கவிட இந்திய அணி 12.6 ஓவர்களில் 131 ரன்களை தொட்டது. டி20 வடிவத்தில் தனது முதல் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில், 36 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களில் அவுட்டானார். 


அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ரன்களில் நடையைகட்ட, உள்ள வந்த முதல் பந்தே ஹூடா பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். நங்கூரமாய் நின்ற சூர்யகுமார் யாதவ் மறுபுறம் மட்டையை சுழட்டி கொண்டு இருந்தார். 


சூர்யகுமார் சதம்:


தில்ஷான் மதுஷங்க வீசிய 17 வது ஓவரில் ஹூடா 4 ரன்களில் வெளியேற, 18.1 வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் டி20 வடிவத்தில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். 


அக்சார் பட்டேல் தன் பங்கிற்கு 2 பவுண்டரிகளை தெறிக்கவிட, 19 வது ஓவர் முடிவில் இந்திய அணி 216 ரன்களை தொட்டது. 


கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 112 ரன்களுடனும், அக்சார் பட்டேல் 21 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.