கடந்த ஒரு மாதமாக புதிய இந்திய அணிக்கு புதிய தேர்வாளர்களை பிசிசிஐ தேடி வந்தது. டி20 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு, சேத்தன் ஷர்மா தலைமையிலான முழு தேர்வுக் குழுவும் பிசிசிஐயால் நீக்கப்பட்டது அப்போதிருந்து, பிசிசிஐயின் புதிய தேர்வுத் தலைவர் யார் என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டது. 


இந்தநிலையில், புதிய அகில இந்திய மூத்த ஆண்கள் தேர்வுக்குழு குறித்த அறிவிப்புகளை பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது. பி.சி.சி.ஐ. சீனியர் தேர்வுக்குழுவின் தலைவராக மீண்டும் சேத்தன் ஷர்மாவே நியமிக்கப்பட்டுள்ளார். 


இதுகுறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா வெளியிட்ட அறிக்கையில், “லக்ஷனா நாயக், அசோக் மல்ஹோத்ரா மற்றும்  ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) அகில இந்திய மூத்த தேர்வுக் குழுவின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான விரிவான செயல்முறையை மேற்கொண்டது. அதன்படி, கடந்த ஆண்டு  நவம்பர் 18ம் தேதி பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஐந்து பதவிகளுக்கான விளம்பரத்தைத் தொடர்ந்து, வாரியம் சுமார் 600 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது .






சரியான ஆலோசனை மற்றும் கவனமாக பரிசீலித்த பிறகு, கிரிக்கெட் ஆலோசனைக் குழு தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை பட்டியலிட்டது. நேர்காணல்களின் அடிப்படையில், மூத்த ஆண்கள் தேசிய தேர்வுக் குழுவிற்கு பின்வரும் வேட்பாளர்களை குழு பரிந்துரைத்துள்ளது.


1) சேத்தன் சர்மா


2) சிவசுந்தர் தாஸ்


3) சுப்ரோதோ பானர்ஜி


4) சலில் அங்கோலா


5) ஸ்ரீதரன் சரத்


தமிழ் நாட்டைச் சேர்ந்த ஶ்ரீதரன் சரத் தேர்வுக்குழுவில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் உடன் இணைந்து ஸ்ரீ தரன் சரத் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்திய யு-19 அணியில் டிராவிட் கேப்டன்சியில் சரத் விளையாடியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டிசம்பரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்சப் மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை (சிஏசி) தேர்ந்தெடுப்பதாக அறிவித்தது.


இதற்கு முன்பும் சேத்தன் ஷர்மா பிசிசிஐயின் தலைமை தேர்வாளராக இருந்தார். இருப்பினும், உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு அவரது ஒட்டுமொத்த அணியையும் பிசிசிஐ நீக்கியது. தற்போது மீண்டும் இந்த பொறுப்பு சேத்தன் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹர்விந்தர் சிங், சுனில் ஜோஷி, தேபாசிஷ் மொகந்தி மற்றும் அபே குருவில்லா ஆகியோர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது சேத்தன் சர்மா அணியில் சிவசுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.